சைரன் விவகாரத்தில் திமுகவுக்குக் காங்கிரஸ் கொடுத்த பதிலடி

 
se

 வரலாறு தெரியாமல் பேசிவிட்டார் துரைமுருகன்.  அவர் பேசியதை திரும்பப்பெற வேண்டும் . அது மட்டுமல்லாமல் இந்திரா காந்தி, காமராஜர் பற்றி  இனிமேல் பேசவே வேண்டாம் என்று கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை.   திமுக அமைச்சருக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் குழு சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.  காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை இந்த விழாவில் பங்கேற்றார்.

du

 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’ அமைச்சர் துரைமுருகன் வயதில் முதிர்ந்தவர். அனுபவம் மிக்கவர். அவை முன்னவர் .  ஆனால் அவர் காமராஜரை பற்றி கூறியது வருத்தமாக இருக்கிறது.  பெருந்தலைவர் காமராஜரை போன்ற எளிமையான முதலமைச்சரை உலகமே கண்டதில்லை.  அப்படிப்பட்டவரை பற்றி பேசும்போது சிந்தித்துப் பேச வேண்டும்’’ என்றார்.

 அவர் மேலும்,   ’’காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் வாகனத்தில் செல்லும் போது எனக்கு எதுக்கு சைரன்.   நான் என்ன வெளிநாட்டிலா இருக்கிறேன். எனக்கு எதற்கு பாதுகாப்பு என்று நிறுத்தியவர்.   அப்படிப்பட்ட எளிமையான முதல்வராக இருந்தவர் காமராஜர்.   ஆனால்,  காமராஜர்- பக்தவத்சலம் காலத்தில் இருந்த சைரனை நிறுத்தியவர் கருணாநிதி என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.வரலாறு தெரியாமல் பேசவேண்டாம்.   சட்டப்பேரவையில் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது’’என்றார். 

 தொடர்ந்து பேசிய அவர்,  ‘’அதேசமயம் காங்கிரஸ் அல்லாத மக்களும் காமராஜரை நேசிக்கின்றார்கள்.  அதனால் துரைமுருகன் மீண்டும் அவர் தன்னை சுய பரிந்துரை செய்து தான் பேசியதை திரும்பப்பெற வேண்டும்.   அதுமட்டுமல்லாமல் இனிமேல் இந்திராகாந்தி,  காமராஜரை பற்றி பேச வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைக்கிறோம்’’ என்று சொன்னார்.

 கூட்டணிக்குள் இருந்தாலும் துரைமுருகன் செய்த தவறை சுட்டிக்காட்டி செல்வ பெருந்தகை கடுமையாகச் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.