இந்திய அளவில் உறுதி செய்தது பாஜக - தமிழக அளவில் உறுதி செய்தது அதிமுக
இட ஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் மக்கள் மன்றத்திலும், பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் உறுதி செய்தது பாஜக தான் என்பதையும், தமிழகத்தில் 69 % இடஒதுக்கீட்டை உறுதி செய்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுகதான் என்பதையும் யாராலும், எப்போதும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 'சமூக நீதிக்கான போராட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்கிறார் மிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
சமூக நீதி வரலாற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளது, இது சாதாரணமாக கிடைத்து விடவில்லை. மக்கள் மன்றத்திலும், பார்லிமென்டிலும், சட்டசபையிலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் வழியே இந்த சாதனையை பெற்றிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
ஆம்! சரி தான் என்று சொல்லும் நாராயணன் திருப்பதி, மக்கள் மன்றத்தில் அளித்த தீர்ப்பினால் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் அத்வானி அவர்களும் அமைச்சர்களாக இருந்த எங்கள் ஜனதா கட்சியின் ஆட்சியில் (1977-79) தான் மண்டல் ஆணையம் நியமிக்கப்பட்டது என்கிறார்.
தொடர்ந்து அவர், 1989 பாராளுமன்ற தேர்தலில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்துவோம்' என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்த ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். பாஜக ஆதரவு பெற்றதாலேயே வி பி சிங் அரசு மண்டல் ஆணையத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்க முடிந்தது என்று சொல்லும் நாராயணன், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜிவ் காந்தி பாராளுமன்றத்தில், இந்த இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து, இந்த 'இட ஒதுக்கீடு தேசத்தை பிளக்கும்' என்று ஒன்றரை மணி நேரம் உரையாடியது குறிப்பிடத்தக்கது. அரசியல் அதிகாரத்திற்காக சமூக நீதியை (மண்டல் ஆணையத்தை) பத்து வருடங்கள் குழி தோண்டி புதைத்தது தி மு க - காங்கிரஸ் கூட்டணி என்பதே உண்மை என்கிறார்.
1993ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது சட்டசபையில் கொண்டு வந்த மசோதாவினால் தான் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு சாத்தியமானது என்று சொல்லும் நாராயணன், ஜூன் 1994ல் குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, ஆகஸ்ட் 1994ல் 9வது அட்டவணைக்குள் கொண்டு வரப்பட்டதன் மூலம் சட்ட பாதுகாப்பு பெறப்பட்டு யாராலும் சட்ட போராட்டம் நடத்த முடியாத நிலை உருவானது என்கிறார்.
2016ல் சலோனி குமாரி வழக்கில் "மருத்துவ படிப்பு அனுமதியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீட்டை வழங்க தயாராக உள்ளோம் , உத்தரவிடுங்கள்" என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையிலேயே கடந்த வருடம் சென்னை உயர்நீதி மன்றம் ஒரு குழுவினை அமைத்து இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டை உறுதி செய்ய சொன்னது. அதனடிப்படையிலேயே, மத்திய பாஜக அரசு குழு அமைத்து அதன் பரிந்துரையின் பேரில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீட்டை உத்தரவிட்டு உறுதி செய்தது பாஜக அரசு என்கிறார் நாராயணன்.
ஆக, இட ஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் மக்கள் மன்றத்திலும், பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் உறுதி செய்தது பாஜக தான் என்பதையும், தமிழகத்தில் 69 % இடஒதுக்கீட்டை உறுதி செய்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுகதான் என்பதையும் யாராலும், எப்போதும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்று அழுத்தமாக சொல்லும் நாராயணன், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 'சமூக நீதிக்கான போராட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை' என்பதே நாடறிந்த உண்மை. ஆகையால் சமூக நீதிக்கான சாதனையை செய்தது திமுகதான் என்று பெருமை தேடிக்கொள்வதை கைவிட்டு, பாஜக உருவாக்கி தந்து, நிலைநாட்டிய சமூகநீதிக்கு எந்த சோதனையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாலே, அதுவே திமுகவின் சாதனை தான் என்பதை திமுக தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் நாராயணன் திருப்பதி