குறுக்கு வழியில் கட்சியை வளர்க்க பாஜக முயற்சி - முத்தரசன் குற்றச்சாட்டு

 
mu

சிறிய பிரச்சனையை மதப்பிரச்சினையாக்கி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று பாஜக முயற்சி செய்கிறது.  ஆனால் அப்படியெல்லாம் அவர்களால் வெற்றிபெற முடியாது என்றார்  இரா.முத்தரசன்.

தஞ்சை மாணவி லாவண்யா பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது மதமாற்றம் காரணத்தினால் தான் என்று பாஜக ஆரம்பத்திலிருந்தே குற்றம்சாட்டி வருகிறது.    தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறது.

hr

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.   காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.   இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகள் எச். ராஜா,  சி.பி. ராதாகிருஷ்ணன்,  நயினார் நாகேந்திரன்,   துரைசாமி,  குஷ்பு, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 மாணவ மரணத்தில் மதமாற்றம் காரணமில்லை.   மாணவியை யாரும் மிரட்டவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி கொடுக்கிறார்.  இன்னொரு பக்கம் இந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.   வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறது   தொடர்ந்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் .  மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

இந்த விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது,  ‘’ தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உறுதிப் படாத செய்தியை வைத்துக்கொண்டு பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது’’ என்றார்.

தொடர்ந்து அதுகுறித்து பேசியவர், ‘’ குறுக்கு வழியில் அவர்கள்  தங்கள் கட்சியை தமிழகத்தில் வளரச் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்.   சிறிய பிரச்சனையை மதப்பிரச்சினையாக்கி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று பாஜக முயற்சி செய்கிறது.  ஆனால் அப்படியெல்லாம் அவர்களால் வெற்றிபெற முடியாது’’என்றார் உறுதியாக.