ஒருமனதாக நிறைவேறிய சக்தி குற்றவியல் சட்ட திருத்த மசோதா
பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கும் மசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் மகாராஷ்டிரா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் சீறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் ’சக்தி குற்றவியல் சட்ட திருத்த மசோதா’ சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மசோதா ஒருமனதாக மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் நிறைவேறியது.
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க இந்த மசோதா வகை செய்கிறது . மேலும் பெண்கள் மீது திராவகம் வீசுவது மற்றும் சிறார்களுக்கு பாலியல் கொடுமை செய்வது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்தபட்ச தண்டனை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
பெண்கள், சிறார்கள் மீதான குற்றங்களை பதிவு செய்த 30 நாட்களில் விசாரணையை முடித்து விடவேண்டும் என்றும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது . டிஜிட்டல் சமூக ஊடகங்கள் வாயிலாக பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களை விசாரிக்கவும் வழிவகை செய்கிறது இந்த மசோதா.


