அதிமுக - பாஜக கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொடர்கிறதா?

அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை . பாஜக எதிர்க்கட்சி இல்லை என்றாலும் துணிந்து கேள்வி எழுப்புகிறது . பாஜக தலைவர் அண்ணாமலை துணிந்து கேள்வி எழுப்பி வருகிறார். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவது இல்லை என்று கடுமையாக சாடினார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.
நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு அதிமுக கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கட்சி தலைமை ரொம்பவே மவுனம் காத்து வருகிறது. ஆனாலும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதிமுகவின் தயவால் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகிவிட்ட பின்னர் அதிமுகவை விமர்சிப்பதா என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு நில்லாமல் அதிமுக எம்எல்ஏக்களை தவறாக பேசி விட்டதாக சொல்லி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை பெரவள்ளூர் காவல் நிலையத்தில் உதவி ஆணையாளரிடம் அதிமுக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கட்சியினர் சென்று புகார் அளித்துள்ளனர் அதிமுக நிர்வாகிகளை பொதுஇடத்தில் தவறாக பேசிவிட்டார். ஆகவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி அந்த புகாரில் கூறியிருக்கிறார்.
நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று தெரிவித்திருந்தார் நயினார் நாகேந்திரன். நாகேந்திரன் கருத்து தனிப்பட்ட கருத்து பாஜகவின் கருத்து அல்ல . அதனால் எடப்பாடி பழனிச்சாமி இடம் வருத்தம் தெரிவித்து கொண்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். ஆனாலும் பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்கி விட வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
ஊராட்சி தேர்தலில் கூட தேராத குப்பைகளை தூக்கிச்சுமந்த அதிமுகவினருக்கு இனிமேலாவது சுயமரியாதை உணர்ச்சி வருமா?என்ற கேள்வியை எழுப்பி இருந்தார் மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி கேட்டிருந்தார்.
இதனால் அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தநிலையில் பாஜகவின் சிறுபான்மையினர் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய போது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் , நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து கட்சியினுடைய கருத்து இல்லை. அவர் சொன்ன கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது என்று அவரே விளக்கம் அளித்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கின்ற பாஜக அதிமுக கூட்டணி இதுநாள்வரை தொடர்ந்து தொடர்ந்து வருகிறது. இனியும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கான முடிவை கட்சித் தலைவர் அண்ணாமலை தான் அறிவிப்பார். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.