நடராஜனை லஞ்சம் வாங்க அனுப்புவித்தது ஏன்? முதல்வருக்கு பாஜக கேள்வி

 
ssstt ssstt

பதவி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சென்னை போக்குவரத்துத்துறை துணை ஆணையர் நடராஜன் என்பவர் 35 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை தன் அலுவலகத்தில் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. ஏற்கனவே 2019 ம் ஆண்டிலும் இதே போன்ற புகாரில் இவர் சிக்கியுள்ள நிலையில், பணியிடை நீக்கம் செய்யாமல், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது லஞ்சம், ஊழலுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசு தயங்குவதையே வெளிப்படுத்துகிறது என்பதோடு, சென்னையில் நடந்த ஊழலை திருநெல்வேலியிலும் தொடர்வதற்கான உரிமத்தை அளிக்கிறதோ  என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. 

ts

மேலும், அந்த அதிகாரி மீதான நடவடிக்கையின்மையானது, பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின்  கூட்டு முயற்சியின் வெளிப்பாடே என்பதை உணர்த்துகிறது.   ஊழலை, லஞ்சத்தை ஒழிக்க முதுகெலும்பு இல்லாதது மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் குற்றச்செயலை தொடர செய்யும் அவலம் இந்த திமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்கிறார். 

குற்றம் செய்து பிடிபட்ட  அதிகாரியை கைது செய்யாதது ஏன்? கைது செய்ய முடியாமல் அழுத்தம் கொடுப்பது யார்?  பணியிடை நீக்கம் செய்யாமல், பணியிட மாற்றம் செய்து வேறு இடத்திலும் லஞ்சம் வாங்க அனுப்புவித்தது ஏன்? லஞ்சம் வாங்குவதை திராவிட முன்னேற்ற கழக அரசு ஊக்குவிக்கிறதா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது குறித்து விளக்க வேண்டும்! இல்லையேல் லஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் அரசாக தான் அழைக்கப்படும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.