ஏன் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்? அந்த 48 மணி நேரம்! ராமதாஸ் விளக்க கடிதம்

 
ப்ம்

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மிக முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ளன. சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் தான் உள்ளாட்சி ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய தமிழ்நாட்டு நகர்ப்புற மக்கள், தங்களின் தீர்ப்பை எழுதப் போகும் நாள். அதை தீர்மானிப்பதற்கு முன்பாக,  ஏன் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை விளக்கவே இந்தக் கடிதம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தான் எழுதிய கடிதத்திற்கு முன்னுரை வழங்கி இருக்கிறார்.

கடிதத்தில்,  தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3843 நகராட்சி உறுப்பினர்கள், 7621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு நாளை மறுநாள் 19-ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ர்ச்

வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்திற்கு 48 மணி நேரம் முன்பாக பரப்புரை நிறைவு செய்யப்படுவதற்கு காரணமே, வாக்காளர்கள் தங்கள் வாக்கு யாருக்கு? என்பதை எந்தத் தலையீடுமின்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். அந்த வகையில் அடுத்த 48 மணி நேரம் வாக்காளர்களாகிய  உங்களுக்கு மிகவும் முக்கியமான நேரம் ஆகும். அந்த நேரத்தை மக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டு, நல்லவர்களுக்கு வாக்களிக்க முடிவெடுத்தால் தான் அது நாட்டுக்கு நல்லதாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார் ராமதாஸ்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது ஏதோ நூற்றுக்கணக்கில் வாக்குகளைக் கொண்ட அமைப்புகளின் உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் தேர்தல் அல்ல. இது தனித்தனி அரசுகளுக்கு நடத்தப்படும் தேர்தல். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 12-ஆவது அட்டவணையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 18 அதிகாரங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டமிடலில் தொடங்கி, சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல், பொது சுகாதாரம்,  குடிசைகளை மாற்றி வீடு கட்டித் தருதல், வறுமை ஒழித்தல், வீடுகளுக்கு குடிநீர் வழங்குதல் உட்பட  18 வகையான பணிகளை விதிகளுக்கு உட்பட்டு நகராட்சி அமைப்புகளே செயல்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இந்த அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த அரசும் வழங்குவதே கிடையாது.

ம்க்

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்கள் அதைப் பயன்படுத்தி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை முழுமையாக செயல்படுத்தி மக்களுக்கு நன்மைகளை செய்வார்கள் என்று தெரிவித்திருக்கும் ராமதாஸ்,

உள்ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பா.ம.க.வினர், அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து எழும் போது, தங்களின் உடைகளில் ஒட்டும் தூசியைக் கூட தட்டிவிட்டு வர வேண்டும்; உள்ளாட்சிகளிலிருந்து தூசைக் கூட எடுத்து வரக்கூடாது என்று பயிற்சி வகுப்புகளின் போது நான் கூறுவேன். அதைக் கடைபிடித்து பா.ம.க. நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மையான நிர்வாகத்தை வழங்குவார்கள் என்கிறார்.

மக்களவைத் தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் கடந்து உள்ளாட்சித் தேர்தல்கள் தான் மிகவும் முக்கியமானவை. அது தான் மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றி வைக்கும் அதிகாரம் கொண்டவை. அத்தகைய பதவிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தால், மக்களுக்கு நன்மை கிடைக்கும்; நகர்ப்புறங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று சொல்லும் ராமதாஸ்,  இதை உணர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நல்ல மாற்றத்திற்கு இது சிறந்த தொடக்கமாக இருக்கட்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.