என்னை கொல்ல வந்தவருக்கு ஏன் திமுக சீட் கொடுத்திருக்குது? சி.வி. சண்முகம்

 
sk

என்னை கொலை செய்ய முயன்றவருக்கு ஏன் திமுக சீட் கொடுத்து இருக்கிறது என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது .   விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முப்பத்தி மூன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களை ஆதரித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று பிரச்சாரம் செய்தார்.

ss

 பிரச்சாரத்தின்போது பேசிய சி.வி. சண்முகம்,   தற்போது ரவுடிகள் தான் திமுகவில் இணைந்து வருகிறார்கள்.   குறிப்பாக 2006ஆம் ஆண்டு என்னை கொலை செய்ய முயற்சித்தவர்,  அந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியான நந்தா என்ற கொலை குற்றவாளியை  திமுகவில் உறுப்பினராக சேர்த்துள்ளார்கள்.   திண்டிவனம் நகரம் மட்டுமல்லாது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணிக்கான ஒப்பந்தங்களை கையாடல் செய்தவர்,  கொலை குற்றவாளியை திமுக வேட்பாளராக நிறுத்தி உள்ளார்கள் என்று குற்றம்சாட்டினார்..

தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம்,    எனக்கு கொடுக்கப்பட்ட காவல் பாதுகாப்பு திமுக ஆட்சிக்கு வந்ததும் விலக்கிவிட்டது. தற்போது கொலைகாரர்களை உறுப்பினர்களாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது திமுக.   நான் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கி உரிமையை கூட இதுவரை புதுப்பிக்கப்படவில்லை என்று சொல்லி காவல் நிலையத்தில் முடக்கி வைத்துள்ளனர்.  

 கொலையாளியை  வேட்பாளராக்கி இருக்கிறீர்கள் என்றால் அதன் பின்னணி என்ன?  என் பாதுகாப்பை விலக்கி,  என்  துப்பாக்கி உரிமையை பறித்ததற்கான நோக்கம் என்ன?  கொலைகாரர்களை வேட்பாளராக நிறுத்திய நோக்கம் என்ன என்று தெரியவேண்டும்.   இதனால் விரைவில் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரப்படும் அங்கு வந்து ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்றார்.