மூன்று பேரில் யார் மேயர்? உச்சகட்ட பரபரப்பில் கோவை திமுக

 
ko


ஒரு மாநகராட்சி,  7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  

 கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 96 வார்டுகளை  திமுக கூட்டணி கைப்பற்றியது. இதில் திமுக மட்டுமே 73  வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது.    கோவை மாநகராட்சியை தனிப் பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியிருக்கிறது.

ko

 இந்த நிலையில் கோவை மேயர் யார் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.   கோவை மாநகராட்சி மேயர் பதவியை திமுக முதல் முறையாக அலங்கரிக்க இருக்கிறது.  திமுக சார்பில் கோவை மாநகராட்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றி பெற்று உள்ளனர்.   இதில் யார் மேயராக தேர்ந்தெடுக்கப்பட போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும்,  போட்டியில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் பெண்கள்தான் மேயராக வருவார் என்கிறார்கள்.

முன்னாள் எம்எல்ஏவும்,   கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாநகர் கார்த்திக்கின் மனைவி இலக்குமி அந்த பட்டியலில் உள்ளார். இவர் 52 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.   ஏற்கனவே கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார்.  இவர் கணவர் கார்த்திக் கோவை துணை மேயராகவும் இருந்திருக்கிறார்.   அதனால் மேயர் பதவிக்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

ni

 அடுத்ததாக இளம்பெண் கவுன்சிலராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நிவேதா .   97வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.   இவரின் தந்தை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதி.   உதயநிதியின் ஆதரவாளரான இவர் தனது மகளுக்கு மேயர் சீட்டு வேண்டும் என்று தலைமைக்கு தூது அனுப்பி விட்டுத்தான் மகளைத் தேர்தலில் போட்டியிடவே தயார் படுத்தி இருக்கிறார் என்கிறார்கள்.  

lo

இதற்கு அடுத்தபடியாக  திமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளரான மீனா லோகு இருக்கிறார்.  ஏற்கனவே கவுன்சிலராக இருந்திருக்கிறார்.  கட்சியில் நிறைய போராட்டங்களை சந்தித்திருக்கிறார். அரசியலில்  நிறைய அனுபவம் இருக்கிறது.   ஆனாலும் இவருக்கு வாய்ப்புகள் குறைவு என்று கட்சியினர் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.