வேஷ்டி, சட்டைகள் கிழியுது - ராகுலை பங்கம் செய்த அண்ணாமலை

 
ar

 உங்களில் ஒருவன் என்ற முதல்வர் மு.க ஸ்டாலின் சுயசரிதை நூலினை வெளியிட தமிழகம் வந்த ராகுல் காந்தி அவ்விழாவில் பேசிய போது,  இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று நாடாளுமன்றத்தில் ஏன் குறிப்பிட்டேன்  என்பது குறித்து பேசினார்.  அடிக்கடி தமிழகம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். ஏன் என்று கேட்டபோது நான் என்னையறியாமல் நான் தமிழன் என கூறினேன்.   ஏனென்றால் இந்த மண்ணில்தான் எனது ரத்தம் கலந்து உள்ளது . எனது ரத்தம் தமிழக மண்ணில் கலந்து உள்ளதால் தமிழகம் என்றேன் என்று குறிப்பிட்டார்.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில்  ராகுல் காந்தி பங்கேற்றபோது,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி பேசியபோது,  தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான மாநிலங்களை மொழிவழி மாநிலமாக பிரித்தது காங்கிரஸ்.  அதன் காரணமாகவே தனித்தன்மையாக ஒற்றுமையாக உள்ளது.  மாநிலங்களின் ஒற்றுமைதான் இந்தியா என்பதை அற்புதமாக ராகுல்காந்தி நாடாளுமன்ற பேரவையில் எடுத்துரைத்துள்ளார் என்றார்.

raa

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது,    உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா குறித்தும் அதில் முதல்வரும் ராகுல்காந்தியின் பேசியதும் குறித்தும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

 முதல்வர் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டிற்கு நான் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்ன அண்ணாமலை,  ஒன்றை நினைத்தால் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது.   தமிழகத்தின் இருண்ட காலம் என்பது எமர்ஜென்சி.  அப்போது மிசாவில் சிறையில் அடைக்கப்பட்டதுதான் என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.   அந்த இருண்ட காலத்தை நடத்திக் காட்டியவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தான்.  ஆனால் அவருடைய பேரன்  ராகுல்காந்தி இன்று  இந்த புத்தகத்தை மிக மகிழ்ச்சியுடன் வெளியிட்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது .  

காங்கிரஸ் திமுக கூட்டணி எப்படி முரண்பாடாக இருக்கிறதோ அதேபோல் தான் முதல்வரின் பேச்சு முரண்பாடாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

 தொடர்ந்து பேசிய அண்ணாமலை,    இந்தியா என்பது மாநிலங்கள் எல்லாம் இணைந்து உருவாகவில்லை.   மொழிகளால் பிரிக்கப்பட்டது .  உண்மையாகவே ராகுல்காந்தி சமரசம் செய்ய வேண்டுமென்று நினைத்தால்,   சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று காங்கிரஸ் கட்சியினர் இடையே சமரசம் செய்ய வேண்டும் . அங்கேயே வேஷ்டி சட்டைகள் கிழிந்து சண்டை மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  சண்டையை சமாதானம் செய்துவிட்டு ராகுல்காந்தி போக வேண்டும்.  அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் பாஜகவை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.