உண்மையைச் சொன்னேன் - தனிப்படை போலீசார் விசாரணைக்கு பின்னர் ஆறுக்குட்டி

 
ar

 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி இடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது கொடநாடு வழக்கில் மறு விசாரணை நடைபெற்று வருவதை அடுத்து ஆறுக்குட்டி இடமும் மறுவிசாரணை நடந்துள்ளது.

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் இருக்கும் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதியன்று கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.   இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயன், ஜெகதீசன், உதயகுமார்,  சந்தோஷ் திலீப், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது . 

aar

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் . இவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .  இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் விசாரணையில் சூடு பிடித்திருக்கிறது.

 கவுண்டம்பாளையம் தொகுதியின் அதிமுக முன்னாள்  எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நீலகிரி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோவை காவலர் பயிற்சி மையத்தில் இருக்கும் அலுவலகத்தில் ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  

இதன் பின்னர் ஆறுக்குட்டியை செய்தியாளர்கள் சந்தித்தபோது,  ‘’கனகராஜ் ஓட்டுநராக என்னிடம் வேலை பார்த்தது உண்மைதான்.  கார் டிரைவர் கனகராஜ் ஒன்றரை மாதம் என்னிடம் பணிபுரிந்தார்.  அதனால் என்னை விசாரணைக்கு அழைத்தனர்.  விசாரணையில் உண்மையை சொன்னேன். என்னிடமிருந்து வேலையை விட்டு சென்ற பின்னர் கனகராஜ் உடன் நான் போனில் தொடர்பு கொள்ளவில்லை என்றும் விசாரணையில் சொன்னேன்’’ என்றவர்,  

’’விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஒத்துழைப்பதாக சொல்லியிருக்கிறேன்.   விசாரணை சரியாக நடைபெற்றது ’’என்றார்.