இதனால்தான் 8 வேட்பாளர்கள் பூஜ்ஜியம் வாங்கினார்கள்

 
ழ்

தேர்தலில் போட்டியிடுவோர் அவர்கள் வாக்கினைப் பதிவு செய்தாலே ஒரு ஓட்டு விழுந்துவிடும்.  அவரது குடும்பத்தினர் , நண்பர்கள், உறவினர்கள் வாக்குகள் இருந்தால் அதுவும் எண்ணிக்கையில் சேரும்.   இப்படி இருக்க ஒரு ஓட்டு கூட வாங்காமல் பூஜ்ஜியம் பெற்றிருக்கிறார்கள் 8 வேட்பாளர்கள்.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவில் இப்படி எட்டு வேட்பாளர்கள் பூஜ்ஜியம் பெற்றிருக்கிறார்கள்.   அந்த வேட்பாளர்களும் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

 திண்டுக்கல் மாவட்டத்தில் கன்னிவாடி 8வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் பிரபாகரன் ஒரு ஓட்டு கூட வாங்காமல் பூஜ்ஜியம் வாங்கியிருக்கிறார்.  அந்த வார்டில் திமுக வேட்பாளர் சர்புதீன் வெற்றி பெற்றிருக்கிறார்.  அதிமுக வேட்பாளர் 11 வாக்குகளை பெற்றிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரண்டு ஓட்டுகளை பெற்றிருக்கிறார். 

ழே

 தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 3வது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சதாசிவம் ஒரு ஓட்டு கூட பெறாமல் பூஜ்ஜியம் பெற்றிருக்கிறார்.  அவர் இரண்டாவது வார்டை சேர்ந்தவர் என்பதால் 3வது வார்டில் போட்டியிட்டதால் தான் தன்னுடைய ஓட்டையும் செலுத்த முடியாமல் போயிருக்கிறது.

 மதுரை மாவட்டத்தில் பேரையூர் பேரூராட்சி 14 வது வார்டில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியசெல்வம் ஒரு ஓட்டு கூட வாங்காமல் பூஜ்ஜியம் வாங்கியிருக்கிறார்.  இவரது ஓட்டு 15வது வார்டில் உள்ளது.  அதனால் இவர் தனது ஓட்டை தனக்கு செலுத்த முடியாத நிலைமை இருந்திருக்கிறது.   ஆனால் இவரை முன்மொழிந்தவர் கூட இவருக்கு வாக்களிக்கவில்லை.   அதனால் ஒரு ஓட்டு கூட விழாமல் போயிருக்கிறது.

 திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் நகராட்சி 6வது வார்டில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.   இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷேக் பரீத் ஒரு ஓட்டு கூட வாங்காமல் பூஜ்ஜியம் வாங்கியிருக்கிறார்.  வேறு வார்டில் இருந்து போட்டியிட்டதால்தான் அவருக்கும் இந்த நிலைமை.  ஆனால் வேட்பு மனு தாக்கலின் போது இவருக்கு முன்மொழிந்தவர் கூட ஓட்டு போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் பேரூராட்சி 10-வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் கலைவாணனுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை.  இவர் மூன்றாவது வார்டில் வசித்து வருவதால்  ஒரு ஓட்டு கூட இவருக்கு கிடைக்காமல் போயிருக்கிறது.   ஆனால், கலைவாணனை முன்மொழிந்தவர் கூட வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

 முதுகுளத்தூரில்  நாம் தமிழர் கட்சி சார்பில் பெர்னாட் என்பவர் 3 வார்டுகளுக்கு போட்டியிட்டார்.  இதில் 4வது வார்டில் 2 ஓட்டும், 8வது வார்டில் 11 ஓட்டும் விழுந்திருக்கின்றன.   6வது வார்டில் ஒரு ஓட்டு கூட வாங்காமல் பூஜ்ஜியம் வாங்கியிருக்கிறார். 

 திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியில் அமமுக வேட்பாளர் ரமேஷ் கண்ணன் ஒரு ஓட்டு கூட வாங்க வில்லை.   வள்ளியூர் பேரூராட்சியில் 4 வது வார்டில் போட்டியிட்ட ரமேஷ் கண்ணன் 3வது வார்டில் வசிப்பதால் அவர் தனக்கான வாக்கை கூட அவருக்கு செலுத்த முடியவில்லை.