ராஜகண்ணப்பனை தூக்கியடிக்க காரணம் இதுதான்!

 
ra

 திமுக அமைச்சரவையில் முதன்முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.   போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.   பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ். எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் . 

ra

முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன் மற்றும் சிவசங்கர் ஆகியோரின் துறைகளை மாற்றுவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.

 கடந்த மே மாதத்தில் மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு நடந்த.   அதன் பின்னர் தற்போது தான் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.   போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பதவி ஏற்ற நாள் முதலாகவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. கட்சியினரிடையேயும் ராஜகண்ணப்பன் சலசலப்புகள் சர்ச்சைகளையும் அவ்வப்போது ஏற்படுத்தி வந்துள்ளார் .

ssv

தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு வழங்க வெளியிலிருந்து இனிப்புகளை வாங்குவதாக ராஜகண்ணப்பன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கட்சி தலைமைக்கும் அவர் மீது அதிருப்தி இருந்து வந்தது.

இந்நிலையில் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதிப் பெயரைச் சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாக புகார் எழுந்த நிலையில் தான்,  தமிழ்நாடு அரசு அவரை வேறு இலாகாவுக்கு மாற்றி நடவடிக்கை எடுத்திருக்கிறது.  

முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் பிடிஓ ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியபோது ,   அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிப் பெயரைச் சொல்லி என்னை இழிவாக பேசிவிட்டார்.   அந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறினார்.

 தொடர்ந்து அதுகுறித்து பேசியவர்,   கடந்த 26 ஆம் தேதி அன்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது உதவியாளர் மூலமாக என்னை சிவகங்கையில் உள்ள அவரது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார்.   இதை அடுத்து நானும் அவரது இல்லத்திற்கு இருபத்தி ஏழாம் தேதி அன்று சென்றேன்.  என்னை பார்த்த அமைச்சர் ராஜகண்ணப்பன்,   நீதான் எஸ்.சி.  பிடிஓ’ வா உன்னை என்ன பண்றேன்னு  என்று பார்க்கிறாயா என்று தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் நான் கண் கலங்கிய படி நின்றேன் .  சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக  தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

bd

 முதுகுளத்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி,  சண்முகம் பேச்சைக் கேட்டு நடக்காத நீ பிடிஓ பதவிக்கு தகுதி இல்லாதவன் . உன்னை வேறு மாவட்டத்துக்கு மாற்றம் செய்து ஒரு வழி பண்ணி விடுவேன்.  முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய கழக செயலாளர் தர்மர்  பேச்சைத்தான் கேட்பியா நான் சொல்வதை கேட்க மாட்டியா என்று மிரட்டினார் என்று அடுக்கடுக்கான புகார்களை சொன்ன பிடிஓ ராஜேந்திரன் அமைச்சரின் இந்த இழிவான செயலுக்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டார்.

 இதையடுத்து முதலமைச்சர் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

 அவருக்கு பதிலாக போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் எஸ். எஸ். சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  இவர் அரியலூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார்.