முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலமே இது;ஏன் வலு குறைந்ததாக இருந்தது? பாஜக கேள்வி

 
st

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் வலுவானதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்போம்  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ‘’அப்படியானால், வலு குறைந்ததாக இருந்தது என்பதன் ஒப்புதல் வாக்குமூலமே இது. ஏன் வலு குறைந்ததாக இருந்தது என்பதற்கான காரணங்களை பட்டியலிடவும்’’ என்கிறார்ர்.

அவர் மேலும் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் பதிவில்,  ’’நீட் தேர்வினால் சமூக நீதி பாதிக்கப்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் பொங்கி எழுகின்றன. கடந்த ஆண்டு, தமிழகத்தில் எம்பிபி எஸ் அனுமதியில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய இடங்களுக்கு, வகுப்பு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் கிடைத்த  இடங்கள் குறித்த புள்ளி விவரம் இவர்களின் கோரிக்கை தவறானது என்பதை தெளிவாக்குகிறது. 

எஸ்.டி வகுப்பினருக்கு (ST) ஒதுக்கப்பட்ட இடங்கள்  29 (1%) கிடைத்த இடங்கள் 29(1%), எஸ்.சி அருந்ததியினருக்கு (SCA) ஒதுக்கப்பட்ட இடங்கள் 84 (3%), கிடைத்த இடங்கள் 85(3%), எஸ்.சி (SC) சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 421(15%) கிடைத்த இடங்கள் 431(15.4%),  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (MBC) ஒதுக்கப்பட்ட இடங்கள் 560 (20%) கிடைத்த இடங்கள் 694 (24.8%), பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு (BCM) ஒதுக்கப்பட்ட இடங்கள் 84 (3%) கிடைத்த இடங்கள் 119 (4.2%),  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC) ஒதுக்கப்பட்ட இடங்கள் 757 (27%) கிடைத்த இடங்கள் 1340 (47.8%), இதர வகுப்பினருக்கு (OC) ஒதுக்கப்பட்ட இடங்கள் 869 (31%) கிடைத்த இடங்கள் 107(3.8%).

nt

இந்த புள்ளி விவரங்கள் மிக தெளிவாக உண்மை நிலையை எடுத்துரைக்கிறது. இதில் எந்த இடத்திலும் சமூக நீதிக்கு பங்கம் இல்லை என்பதோடு, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 31 % விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ள இதர வகுப்பினருக்கு (OC) 3.8 % இடங்களே கிடைத்து மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்ட மாணவர்களே அதிகமாக பலனடைந்துள்ளனர். இதில் எங்கிருந்து சமூக நீதி பாதிக்கப்படுகிறது என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. 

இந்த வருடமும் மதிப்பெண்கள் அடிப்படையில் பார்க்கும் போது, இதே நிலை தான் தொடரும் என தெரிகிறது. ஆகவே புலம்புவதை விட்டு  கல்வி தரத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சி செய்வதே சிறப்பை தரும். உண்மைக்கு புறம்பான தகவல்களை, அறிக்கைகளை வெளியிட்டு மக்களை, மாணவர்களை குழப்புவதை நிறுத்தி கொண்டு கல்வி வியாபாரிகளுக்கு ஆதரவாக மலிவு அரசியல் செய்வதை கைவிட வேண்டும். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது நலன் தரும்.’’என்று தெரிவித்திருக்கிறார்.