இதுபோன்ற உறவுகளை எனக்காக விட்டுச் சென்ற அம்மா... உருகும் பூங்குன்றன்

 
y

இதுபோன்ற உண்மையான உறவுகளை எனக்காக விட்டுச் சென்ற அம்மா! உன்னை நித்தமும் வணங்கி மகிழ்கிறேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைத்து உருகுகிறார் அவரின் உதவியாளர் பூங்குன்றன்.

ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட பூங்குன்றன்,  வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நண்பர்களோடு சென்றிருந்த அனுபவம் குறித்து சொல்கிறார்.    விநாயகர், வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி, முத்துக்குமார சுவாமி, அங்காரகன் தரிசனம் செய்து கொடிமரத்திற்கு செல்லும் பாதையில் ருத்திராட்சங்கள் விற்பதைக் கண்டு வேடிக்கை பார்த்தேன். ருத்ராட்சம் மீது எனக்கு அலாதிப் ப்ரியம் என்கிறார். 

தொடர்ந்து அவர் தனது வைத்தீஸ்வரன் கோவில் பயண அனுபவம் குறித்து,  9, 10, 11 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் தனியாக வைக்கப்பட்டிருந்தன. அதைப் பற்றி கடைக்காரரிடம் விசாரித்து கொண்டிருந்தேன். இது உண்மையானதா? தரமானதா? என்று தெரியவில்லை. உண்மையை தெரிந்துகொள்ள அவரிடம் எனக்குத் தெரிந்த குருக்கள் பெயரைச் சொன்னேன். அவரும் அவர் இன்று வேலையில் தான் இருக்கிறார் என்று தெரிவித்தார்.

p

 இது உண்மையானதா? என்று எப்படி தெரிந்து கொள்வது என்று சிந்தித்தவண்ணம் அவரைப் ஊடுருவிப் பார்த்தேன். தரையில் உட்கார்ந்திருந்த அவர் கட்டியிருந்த வேஷ்டி நம் கட்சி வேஷ்டி. கரண்ட் கட் ஆகி நொந்து கொண்டிருந்த வேளையில் மீண்டும் கரண்ட் வந்தது போல என் முகம் பிரகாசமாகிப் போனது.

மகிழ்ச்சியோடு நீங்கள் அ.தி.மு.கவா என்றேன். ஆமாம் என்றார். என் பெயர் பூங்குன்றன் என்றேன். உட்கார்ந்திருந்த அவர் உடனே எழுந்து பாசத்தோடு என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர் ததும்ப உங்களைப்பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் சந்தித்தது இல்லை. கோயிலுக்கு நீங்கள் அடிக்கடி வருவதாகச் சொல்வார்கள். பார்க்க ஆசைப்படுவேன். ஆனால் இதுவரை பார்க்க முடியவில்லை என்று நெகிழ்ந்ததை குறிப்பிட்டிருக்கிறார். 

பதிலுக்கு பூங்குன்றன் நெகிழ்ந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.    ‘’எனது பெயர் சுப்ரமணியன், நான் 20 வருடங்களுக்கு மேலாக பேரூராட்சி கழக செயலாளராகவும், கடந்த முறை பேரூராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றினேன். அம்மா மறைவுக்கு பிறகு மனதிற்குப் பிடிக்காமல் எனக்கு பதவி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டேன். உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுக் கட்சியிலிருந்து என்னை அழைத்தார்கள். நான் புரட்சித்தலைவர் வழி வந்தவன், புரட்சித்தலைவியின் அடிபற்றியவன் என்றுச் சொல்லி விலகி நின்றேன் என்று உணர்ச்சி ததும்பச் சொன்னார். அதை கேட்ட என் மனமும் கண்ணீரை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அர்ப்பணித்தது. 

po

ஆயிரம் ரூபாய் என்று சொன்ன ருத்ராட்சத்தை எனக்கு 500 ரூபாய்க்கு தந்தார். இதுவே எனக்கு அம்மா கொடுத்த பரிசு. இதுவே நான் பெற்ற பேறு. உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார். உங்களைப் போன்ற உண்மையான கட்சிக்காரரை சந்தித்ததில் எனக்குத்தான் பெருமகிழ்ச்சி என்றேன். அடிக்கடி வாருங்கள், இங்குதான் இருப்பேன் என்றார். உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்து விடை பெற்றேன்.

பணத்தை பெரிதாக நினைத்து சுயநலமாக வாழ்பவர் மத்தியில் உண்மையான உறவுகளை எனக்காக விட்டுச் சென்ற அம்மா! உன்னை நித்தமும் வணங்கி மகிழ்கிறேன்’’ என்று உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார்.