கண்ட துண்டமாக வெட்ட வேண்டும் என்று என் கனவில் வந்தது...ஸ்டாலினுக்கு பாஜக கடும் எச்சரிக்கை
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மதுரை தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜமாத் அமைப்பின் ஆடிட்டிங் கமிட்டி உறுப்பினர் கோவை ரஹ்மதுல்லாஹ் என்பவர் பேசியதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு சொல்கிறோம் அந்த இடத்தில் அப்படி ஒரு ஜட்ஜ்மெண்ட் அறிவிப்பாயானால் போன வருஷம் ஆகஸ்ட் மாதம் ஒரு அநியாயமாக தீர்ப்பு வழங்கி விட்டான் என்று சொல்லி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சில பேர் கோபத்தில் ஆத்திரத்தில் ஒரு நீதிபதி வாக்கிங் போயிட்டு இருக்கும்போது பயணிகள் ஆட்டோவினை ஏற்றி சாகடிச்சாங்க. அந்த நீதிபதி கொல்லப்பட்டார் . நாட்டில் நீதிபதிகள் உயிரோடு வாழ முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் வந்திருச்சு என்று நீதிபதிகள் கதறினார்கள். அதே மாதிரி உணர்ச்சிவசப்படும் மக்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்று எச்சரித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய பலரும் நீதிபதிகளை கடுமையான எச்சரித்திருந்தனர். இதற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, எச்சரிக்கை! என்ற தலைப்பில் இந்த விவகாரத்தில் தனத கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்துள்ள நிலையில். இராமநாதபுரம் திருவாடானையில் 18/03/2022 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவ்ஃபீக் என்பவர் 'ஹிஜாப் குறித்த தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளை இழுத்து போட்டு வெட்ட வேண்டும்" என்றும் " அந்த நீதிபதிகளை கண்ட துண்டமாக வெட்ட வேண்டும் என்று என் கனவில் வந்தது என்றும் அந்த நீதிபதிகளை விளக்குமாற்றால் அடிக்க வேண்டும்'. நாங்கள் இந்த நாட்டை நேசிக்க கூடியவர்கள் அல்லர். ஆஹிருத்தை தான் நேசிப்பவர்கள். சாவதற்கு துணிந்தவர்கள் நாங்கள். எங்கள் மனது சொல்வதை செயல்படுத்தினால் நாடு தாங்குமா?' என்றும் பேசியுள்ளதையும் அந்த கூட்டத்தில் உள்ளவர்கள் அதை ஆமோதிப்பதையும் பார்க்க, கேட்க முடிகிறது என்கிறார்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ள நிலையில். அனைத்து இடங்களிலும் கூடியிருந்த பொதுமக்களை கொலை செய்ய தூண்டும் விதத்தில் பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது அந்த இயக்கம் என்று சொல்லும் நாராயணன், திட்டமிட்ட ரீதியில் தமிழகத்தில் சட்டஒழுங்கை சீர்குலைக்க, மதநல்லிணக்கத்தை குலைக்க, மதக்கலவரங்களை உருவாக்க, நீதிமன்றங்களின், நீதிபதிகளின் மாண்பை குறைத்து, அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று பொது வெளியில் பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார்.
ஆர்ப்பாட்டத்தை நடத்த விட்டு வேடிக்கை பார்ப்பதும், பேசிய பின் கைது செய்வது போன்ற நாடகங்களை நடத்துவது மிக ஆபத்தானது. இது தொடர்ந்தால், தமிழகத்தில் விபரீத விளைவுகள் ஏற்படும், மதநல்லிணக்கம் பாதிக்கப்பட்டு மத கலவரங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் எச்சரித்துள்ளார்.
'வருமுன் காப்போம்' என்று முழங்கும் தி மு க அரசு, 'வந்த பிறகு பார்ப்போம்' என்று அமைதி காப்பது கண்டிக்கத்தக்கது. இனியும், தமிழக தவ்ஹீத் ஜமாஅத் இயக்க கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல், 'நீதிபதிகளை கொலை செய்வோம்' என்று மிரட்டியவர்களை கைது செய்து சிறையிலடைப்பதோடு, தமிழக பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்படுவதால் தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்ய வேண்டும். தவறினால், அந்த இயக்கத்தினால் ஏற்படும் கொடூர விளைவுகளுக்கு தமிழக அரசும், தமிழக காவல்துறையுமே பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்.