மோடி கேட்டதும் ஸ்டாலின் கொடுத்த உறுதி
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் தனது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும்’ உங்களில் ஒருவன்’ என்ற நூலினை வெளியிட்டார். ராகுல்காந்தி, பினராய் விஜயன், உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இன்றைய தினம் தனது 69 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவு இடங்களுக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும், கட்சி நிர்வாகிகளும் அவருக்கு நேரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து சொல்லி வரும் நிலையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர், ’’தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்’’ என்று கொண்டிருக்கிறார். அதற்கு , ’’தங்களின் ஒத்துழைப்போடு தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்’’ என்று பிரதமரிடம் உறுதியளித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.