திமுக சிகப்பு கம்பளம் விரித்தது; பாஜகவுக்கு போகமாட்டேன் - சைதை துரைசாமி ஆவேசம்
பாஜகவுக்கு மட்டுமல்ல நான் எந்த கட்சிக்கும் தாங்க மாட்டேன். நான் நினைத்தால் எந்த கட்சிக்கும் போகலாம். ஆனால் போகமாட்டேன். திமுகவில் சேர்ந்து இருக்கலாம். திமுகவில் எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்கள். ஆனால் நான் கடைசி வரைக்கும் எம்ஜிஆரின் தொண்டனாகவே இருப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஆவேசப்பட்டுள்ளார் சைதை துரைசாமி.
மனிதநேயம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும் முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி , பாஜகவிற்கு தாவ போவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. பாஜகவின் நிகழ்ச்சியில் அவர் இன்று பங்கேற்பதால் இந்த செய்தி பரவின. மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் நூல் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நூலை வெளியிட முதல் பிரதியை சைதை துரைசாமி பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்த அழைப்பிதழ் வலைத்தளங்களில் வைரலானது. பாஜகவை நிகழ்ச்சியில் சைதை துரைசாமி பங்கேற்பதன் மூலம் அவர் பாஜகவுக்கு தாவுகிறார் என்று என்று பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். கடந்த சில வருடங்களாகவே அதிமுகவில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த சைதை துரைசாமி திடீரென்று பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் பலருக்கும் இந்த சந்தேகம் எழுந்தது. ஆனால் இதற்கு ஆவேசப்பட்டு பேசியுள்ளார் சைதை துரைசாமி.
‘’ நான் ஒரு கல்வியாளராக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். பல கட்சியினரும் என்னை அழைத்து சிறப்பு விருந்தினராக பேச வைக்கிறார்கள். அப்படித்தான் பாஜக நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன். இதற்கு ஏன் அரசியல் சாயம் பூசுகிறார்கள்? என்னைப் பற்றிய சர்ச்சையை எழுப்புகிறீர்கள்? நான் நேற்றும் இன்றும் என்றும் என்றென்றும் எம்ஜிஆரின் தொண்டனாகவே இருப்பேன். இதில் எந்த மாற்றமும் கிடையாது என்றார்.
தொடர்ந்து அதுகுறித்து பேசியிருக்கும் சைதை துரைசாமி, நான் நினைத்திருந்தால் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் சென்று இருக்கலாம். திமுகவுக்கு சென்றிருக்கலாம் திமுக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க தயாராக இருந்தது. இந்த காலகட்டத்திலும் பணத்திற்காக கட்சி மாறும் நிலைப்பாட்டை நான் எடுத்ததில்லை. நான் ஒரு கொள்கையோடு பயணித்துக் கொண்டிருப்பவன். எத்தனையோ வழிகளில் எப்படி எப்படியோ சம்பாதித்து இருக்கலாம் . ஆனால் நான் அதற்கான ஆள் இல்லை. வீணாக என்னை பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் . நான் யாருக்கும் எதற்கும் பயந்தவனும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.