சென்னையின் முதல் பெண் மேயர் இவர்தான்! டிக் அடித்த ஸ்டாலின்!
சென்னை மேயர் பதவி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் சென்னை மேயர் பெரும்பாலும் முதல்வர் உடனேயே இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது என்பதால்தான். அதனால் தான் உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயராக வரப்போகிறார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதற்காகத்தான் அவசரஅவசரமாக திரைப்படங்களில் நடித்து முடிக்கிறார் உதயநிதி என்ற பேச்சும் இருந்தது. ஆனால் அவர் அமைச்சராக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சிலர் பேசி வந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் மேயர் என்கிற பேச்சு நின்று போனது.
உதயநிதி மேயர் ஆகவில்லை என்றால் அவர் கைகாட்டும் இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவருக்குத் தான் சென்னை மேயர் பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் கட்சியினர் பேசி வந்தனர். அதன்பின்னர் சென்னை மேயர் பேச்சில் கனிமொழியின் பெயரும் அடிபட்டது .
என்னதான் மத்தியில் செல்வாக்கு இருந்தாலும் மாநிலத்தின் செல்வாக்கு அதிகம் வேண்டும் என்று கனிமொழி விரும்புவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். சென்னையில் திமுகவின் வெற்றியை பார்த்து நிச்சயம் சென்னை மேயர் தான் தான் என்று அவர் கணக்கு போட்டதாகவும் சொல்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட அவர் சென்னையில்தான் போட்டியிடவே விரும்பியிருக்கிறார். ஆனால் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் தான் நாடார் சமுதாய வாக்குகளை மனதில் வைத்து தூத்துக்குடியை கேட்டதாக சொல்கிறார்கள்.
மத்திய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வருவதற்கு சென்னை மேயர் பதவியும் ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்றே கருதியிருக்கிறார் கனிமொழி . சென்னை மேயர் பதவிக்காக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருந்த கனிமொழிக்கும் டெல்லி அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வரவேண்டும் என்கிற கனிமொழியின் எண்ணத்தை அவரது ஆதரவாளர்களும் புரிந்து கொண்டுதான் அவரது பிறந்த நாள் அன்றைக்கு கனிமொழியை சென்னை மேயர் என்பது போலவே போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அதுவும் அறிவாலயத்திற்கு முன்பாகவே போஸ்டரை ஒட்டி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினர்.
கனிமொழி சென்னை மேயராக போகிறார் என்ற பேச்சு அதிகமாவதற்கு ஒரு காரணம், சென்னை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கி அறிவிக்கப்பட்டதை அடுத்து இது நல்ல வாய்ப்பாக அமைந்து இருக்கிறது என்று கனிமொழியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் பட்டியல் இனத்தவருக்கு அப்பதவியை ஒதுக்கப்பட்டதால் கனிமொழியின் ஆதரவாளர்கள் அப்செட்.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார்? என்கிற எதிர்பார்ப்பு பெரிதும் எகிறிக் கிடக்கிறது. சென்னை மாநகராட்சியின் மேயர் ஒரு பெண் என்பதால் , அதுவும் பட்டியலினப்பெண் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. அந்தப்பெண் யார் என்பது எப்படியும் திமுக மகளிர் அணி தலைவி கனிமொழிக்கு தெரிஞ்சிருக்கும். அவர் கை காட்டும் நபரைத்தான் ஸ்டாலின் மேயராக்கப் போகிறார் என்றூ அவரது ஆதரவாளர்கள் சொல்லி வந்தனர். ஆனால் சென்னையின் முன்னாள் மேயர், மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர், தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு பெண்ணை சிபாரிசு செய்திருக்கிறாராம். அதேபோல் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்து ஸ்டாலினின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் பி.கே. சேகர்பாபு ஒரு பெண்ணை சிபாரிசு செய்து இருக்கிறாராம்.
ஆலந்தூர் மண்டலத்தில் 153 வது வார்டில் போட்டியிடும் அமுத பிரியா செல்வராஜ் மற்றும் மணலி மண்டலத்தின் 17 வது வார்டில் போட்டியிடும் கவிதா நாராயணன் ஆகிய இரண்டு பேரில் ஒருவருக்கு பதவி பதவி கிடைக்கலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. இந்த இரண்டு அமுத பிரியா செல்வராஜ் என்பவர் மா.சுப்பிரமணியத்தின் ஆதரவாளர். கவிதா நாராயணன் என்பவர் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கு நெருக்கமானவர். இந்த இரண்டு பேரில் முதல்வர் ஸ்டாலின் சாய்ஸ் யார்? யார் பெயரை டிக் அடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்திருக்கிறது.
இந்த இரண்டு பேரும் மட்டுமல்லாமல் மேலும் இரண்டு பெண்கள் பெயர் அடிபடுகிறது. மூன்றாவதாக அடிபடும் பெயர் புழல் நாராயணன் மனைவி கவிதா. திமுகவில் நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வருபவர் நாராயணன். பேராசிரியர் அன்பழகனை வைத்து அதிகமான பொதுக் கூட்டங்கள் நடத்தியவர் இவர்தான். இவரது மனைவி கவிதாவும் திமுகவுடன் நெருங்கியிருக்கிறார். என்னேரமும் அறிவாலயத்திலேயே அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். கவிதா மட்டுமல்லாமல் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீதரணி பெயரும் அடிபடுகிறது. கொளத்தூர் தொகுதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான தொகுதி என்பதால் ஸ்ரீதரணிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.
சென்னையின் முதல் பெண் மேயர் யார், அதுவும் சென்னை மாநகராட்சியின் பட்டியலின பெண் மேயர் யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் பொதுமக்களுக்கும் அதிகம் ஏற்பட்டிருக்கிறது.