அண்ணாமலைக்கு 24 மணி நேர கெடு விதித்த செந்தில்பாலாஜி

 
sa

அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் குறித்து அடுத்த 24 மணி நேரத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.  அப்படி தெளிவுபடுத்தவில்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கெடு விதித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

355 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திடம் எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கம் முறைகேடாக 4,472 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

se

இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  ‘’டெபாசிட் 10 சதவிகிதாமக இருந்ததை குறைத்து தமிழக அரசின்  மின்சார வாரியம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு சலுகை காட்டியதைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார் அண்ணாமலை.   ஆனால், எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதல் இல்லாமல் அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் விமர்சித்துள்ளார்.

2006ம் ஆண்டில் துவங்கப்பட்ட திட்டம், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது.   10 சதவீதம் என அதிமுக ஆட்சியில் நிர்ணயம் செய்யப்பட்டதால்தான் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  2020ல் மின் திட்டங்களுக்கு வைப்பு தொகை 3 சதவிகிதம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.  கடந்த 2019ம் ஆண்டில் போடப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படியே தற்போது ஒப்பந்தம் தரப்பட்டிருக்கிறது.


மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மின்வாரிய திட்டங்களுக்கு  வைப்புத்தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.   பின்வாரிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை முழுவதும் அறிந்த பின்னரே விமர்சனம் செய்யவேண்டும்’’என்றார்.

தொடர்ந்து அவர்,  அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் குறித்து அடுத்த 24 மணி நேரத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்று கெடு விதித்தார்.

அப்படி தெளிவுபடுத்தவில்லை என்றால் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.