’’அதைப் பார்த்தாவது இவங்க திருந்தலாமே’’
நீட் தேர்வினால் தான் மருத்துவ படிப்புக்காக நமது மாணவர்கள் உக்ரைன் செல்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனால் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவ கல்வி கற்க போனார்கள் என்று தர்க்கம் செய்ய இது நேரமல்ல. உள்நாட்டில் மருத்துவ கல்லூரி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்வது உடனடி இலக்காக அமைய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதற்கு, உக்ரைனில் படிக்க வேண்டுமானாலும் நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் இது போன்ற கருத்துகளை சொல்வது அவர்களின் அறியாமையை அல்லது அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
அவர் மேலும் இதுகுறித்து பரவி வரும் செய்திகளுக்கு, உக்ரைனில் உள்ள நம் மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரம் உக்ரைனை விடவும் பன்மடங்கு அதிக அளவில் நம் மாணவர்கள் ரஷ்யாவில் தான் உள்ளனர். இதை உணராமல் அர்த்தம் இன்றி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார்.
தொடர்ந்து இதுகுறித்து நாராயணன், அரசியல் தெளிவு இல்லாமல் எதிர்க்கட்சிகள் என்றாலே எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என நினைத்து செயல்படுவோர்க்கு என்ன விளக்கம் தந்தாலும் புரியாது. மத்திய அரசுடன் கடுமையாக மோதும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே இந்த விஷயத்தில் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதை பார்த்தாலாவது இவங்க திருந்தலாமே என்கிறார்.