உரிய சீட்டுகள் கிடைக்கவில்லை - துரை வைகோ வருத்தம்
கூட்டணியில் உரிய சீட்டுகள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் தெரிவித்தார் துரை வைகோ.
மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, திருச்சி மாநகர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை அறிவித்து அறிமுகப்படுத்தினார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய சீட்டுகள் கிடைக்கவில்லை. எங்களுக்கும் அந்த வருத்தம் இருக்கிறது. திமுகவினருக்கும் அந்த வருத்தம் இருக்கிறது. எல்லோருக்கும் சீட்டு வழங்க முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். அரசியலைத் தாண்டி மக்களுக்காக செயல்படுகின்ற இயக்கம்தான் மதிமுக என்றார்.
முன்னதாக அவர் கட்சியினர் மத்தியில் பேசிய போது, மதிமுகவினர் 90% பேர் சமூக வலைத்தளம் பயன்படுத்துவது இல்லை . நமது கட்சியினர் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து வாக்காளர்களை இணைத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும். இனி சமூக வலைத்தளங்கள் இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் இல்லை. ஆகவே வாட்ஸ், அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பயன்படுத்துங்கள். உங்களுக்கு நமது ஐடி விங்க் குழுவினர் உரிய உதவிகள் செய்வார்கள் என்று அறிவுறுத்தினார்.