அதிமுக கவுன்சிலர்களை டென்சன் ஆக்கிய திமுக கவுன்சிலர்களின் உறவினர்கள்
ஊராட்சி பிரதிநிதிகளின் உறவினர்கள் என சொல்லிக்கொண்டு யாரும் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவியில் தலையிடக் கூடாது. அப்படி இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படியிருந்தும் மதுராந்தகம் ஊராட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் உறவினர்களின் தலையீடு இருந்ததால் சலசலப்பும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 8வது வார்டு கவுன்சிலர் ஒப்பிலாவின் தந்தையும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருக்கும் சத்யகோபால் பங்கேற்றார். அதே போல் 12வது வார்டு கவுன்சிலராக இருக்கும் பாலாவின் தந்தையும், திமுகவின் மதுராந்தக வடக்கு ஒன்றிய செயலாளருமான ரோக் சகாயராஜ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
திமுக கவுன்சிலர்களின் உறவினர்கள் கூட்டத்தில் பங்கேற்றதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் நாங்கள் கலந்து கொள்வோம் என்று திமுகவைச் சேர்ந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அதிமுக கவுன்சிலர்கள் அந்த நபர்களை வெளியேற்ற வேண்டும் என்று தொடர்ந்து கூச்சலிட்டனர்.
கவுன்சிலர்களின் உறவினர்கள், கணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அதிமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனால் சில மணி நேரம் சலசலப்பும் குழப்பமும் ஏற்பட்டது.