ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது - இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம்
ஆளும் கூட்டணியில் இருந்து 40 எம்பிக்கள் விலகியதால் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்து உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து உள்ளது.
இறக்குமதி ஒன்றையே பெரும்பாலும் சார்ந்திருக்கும் இலங்கை அரசு தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் முதல் எரிபொருட்கள் வரை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல் டீசல் சமையல் கியாஸ் போன்ற எரிபொருட்களை நாட்கணக்கில் காத்திருந்துதான் வாங்க வேண்டிய நிலைமை உருவாகியிருக்கிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் மின் உற்பத்தி முடங்கியதால் நாடு முழுவதும் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், பவுடர், அரிசி பருப்பு, கோதுமை என்று மக்களின் அன்றாட உணவுப் பொருள்கள் எட்டாத விலையில் விற்கப்படுகின்றன. இதனால் ஒரு வேளை உணவுக்கு கூட மக்கள் திண்டாடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இயல்பு வாழ்க்கை நாளைக்கு நான் கேள்விக்குறி ஆகிக் கொண்டே வருகிறது.
உணவு, எரிபொருள் தட்டுப்பாடு, மருந்து , பல மணி நேர மின்வெட்டு கடைகள் அடைப்பு, நிறுவனங்கள் மூடல், பொருட்கள் வாங்கும் திறன் இழப்பு என்று மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் .
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் இந்த பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர்.
இந்தப் பிரச்சனைக்கு முடிவு தீர்வு காணுகின்ற வகையில் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க வேண்டும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்து இதற்காக எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அரசில் இணைந்து அமைச்சர் பதவிகளை பெறுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன. அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன எதிர்க்கட்சிகள்.
இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது . இந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கின்ற வகையில் ஆளும் கூட்டணிக் உள்ளேயே வெளிப்படையாக விரிசல் ஏற்பட்டு உள்ளது. ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் இருந்து 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் நேற்று விலகியுள்ளனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலபிடியாவும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. ஆட்சியை தக்கவைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்கிற நிலை இருக்கிறது. 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் விலகியதால் இலங்கை அரசு கவிழும் நிலையில் உள்ளது.