பிபி ஏறத்தான் செய்யும் - பாஜகவை மறைமுகமாக சாடிய ஸ்டாலின்
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பிபி ஏறத்தான் செய்யும் என்று பாஜகவை மறைமுகமாக சாடியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள் மற்றும் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், ‘’நம் ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் சிந்தனை. அது என்ன திராவிட மாடல் சிந்தனை என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். நீதியுடன் கூடிய வளர்ச்சி அதாவது வாய்ப்புகளும் வளங்களும் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா வரம்பு மக்களுக்கும் எல்லா மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கும் சரிசமமாக போய்ச்சேர வேண்டும் என்பதுதான். இதில் எந்த ஜாதி, மத ,வர்க்க பாலின வேறுபாடும் இருக்க கூடாது .
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கிருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் சென்றடைவதற்கு பதிலாக அங்கு வாழும் அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். அதுதான் திராவிட சிந்தனை. நாங்கள் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களும் இந்த சிந்தனையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகிறது’’ என்றார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ’’திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலங்காலமாக சொல்லப்பட்ட பொய்யை சுக்குநூறாக உடைத்து இருக்கிறோம். உதாரணமாக திமுக ஆட்சியில் தான் ஆக்கிரமிப்பிலிருந்து 1789 கோடி ரூபாய் மதிப்பிலான 180 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு எடுத்து இருக்கிறோம். கோயில் சீரமைப்பிற்கு ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி கொடுக்க தொடங்கி இருக்கிறோம். ஆனால் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பிபி ஏறத்தான் செய்யும். நாமும் என்னென்னவோ செய்து பார்க்கிறோம். அந்த மக்களோட ஒற்றுமையை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று வெறுப்பு இருக்கத்தான் செய்யும்’’ என்று பாஜகவினை மறைமுகமாக சாடியுள்ளார்.