நியமன எம்.பி.,க்கள்! பரிசீலனையில் ரஜினி, இளையராஜா

 
rஅ

 ஆறு நியமன எம்பிக்களின் பதவிக்காலம் வரும் 24-ஆம் தேதி முடிகிறது என்பதால் புதிய நியமன எம்பிக்களின் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.   புதிய நியமன எம்பிக்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த்,  இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 ராஜ்யசபாவில் மொத்தம் 245  எம்.பிக்கள்  இருக்கிறார்கள்.   இதுதவிர மத்திய அமைச்சரவையின் பரிந்துரையில் 12 எம்பிக்களை ஜனாதிபதி நியமனம் செய்வார் .  அந்த வகையில் 2016 ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட நடிகர் சுரேஷ் கோபி,  மேரி கோம் , சுப்பிரமணியசாமி, நரேந்திர ஜாதவ்,  ரூபா கங்குலி,  ஸ்வவன்தாஸ் குப்தா ஆகிய ஆறு எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் 24-ஆம் தேதியன்று முடிகிறது.

இ

 இதையடுத்து புதிய நியமன எம்பிக்களை அறிவிப்பது குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது.   கலை, இலக்கியம், பத்திரிகை, விளையாட்டு, தொழில், கல்வி என்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் தான் ராஜ்யசபாவுக்கு நியமிக்கப்படுவது வழக்கம் .  தீவிர அரசியலில் இருப்பவர்களும் சில சமயங்களில் நியமிக்கப்படுகின்றனர் .  அப்படித்தான் காங்கிரஸில் மணி சங்கர் ஐயர் நியமிக்கப்பட்டதும்,  பாஜக ஆட்சிக்கு வந்ததும் சுப்பிரமணியசாமி நியமனம் செய்யப்பட்டதும்.

மீண்டும்  தன்னை நியமன எம்.பியாக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்.  ஆனாலும் அவர் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருவதால் அவரை மீண்டும்  எம்.பியாக்க மோடி மற்றும் அமித் ஷா இருவருக்குமே விருப்பமில்லை என்று தெரியவந்திருக்கிறது.   இதை தெரிந்துகொண்ட சுப்பிரமணிய சுவாமி,   மோடி அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

 இந்த நியமன எம்.பிக்களில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.   இதற்காகத்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன்,  எச். ராஜா ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறது பாஜக மேலிடம்.  இதில் கேரளாவின் ஆளுநர் பதவிக்கு எச்.ராஜா பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 

 மலையாள நடிகர் சுரேஷ் கோபி,  வங்காள நடிகை ரூபா கங்குலில் ஆகிய திரைத்துறையை சேர்ந்தவர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் திரைத்துறையை சேர்ந்த ஒருவருக்கு எம்பி பதவி  கிடைப்பது உறுதி என்கிறார்கள்.    இசையமைப்பாளர் இளையராஜா,  நடிகர் ரஜினி ஆகியோரின் பெயர்களை பாஜக மேலிடம் பரிசீலித்து வருகிறது என்றும், இஸ்ரோ விஞ்ஞானி சிவன் பெயரும் இந்த பரிசீலனையில் உள்ளது என்றும் தகவல்.