அமைச்சர் சா.மு. நாசர் மகன் வெற்றி! துணை மேயரா?
ஆவடி மாநகராட்சி தேர்தலில் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா வெற்றி பெற்றுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சா.மு. நாசர், பால்வளத்துறை அமைச்சர் ஆனார். அவரது மகன் ஆஸிம் ராஜா தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆவடி மாநகராட்சி நாலாவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நடந்த வாக்குப் பதிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அமைச்சர் சா.மு. நாசர் மகன் ஆசிம் ராஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 626 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆவடி கடந்த 2019ம் ஆண்டில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது முதல் தேர்தலைச் சந்திக்கும் ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பருத்திப்பட்டு, அண்ணனூர், கோயில்பதாகை, பட்டாபிராம், மிட்னமல்லி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 48 வார்டுகள் உள்ளன. அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என்று மொத்தம் 396 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளார்கள்.
இதில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசரின் மகனான எஸ்.என்.ஆசிம்ராஜா வெற்றி பெற்றால் துணை மேயர் ஆவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் வெற்றி பெற்றுள்ளார்.