மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி ...பசுமையான நினைவுகள் பகிர்வு
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று 69 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி முதல் தேசிய அளவிலான தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரின் உடன் பிறந்த அண்ணன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார் என்று தகவல்.
கடந்த 2014ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியால் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் மு. க. அழகிரி. அதன்பிறகு திமுகவுக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார் அழகிரி. கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தேர்தலில் அழகிரி தனித்துப் போட்டியிடப் போவதாகவும், பாஜக உடன் இணைந்து போட்டியிடப் போவதாகவும் பரபரப்பான செய்திகள் வந்து
கொண்டிருந்தன. கடைசியில் அவர் தனிக் கட்சியும் ஆரம்பிக்காமல் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்காமல் மௌனமாக இருந்தார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்து முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஆனதும், அழகிரியின் மகனும் மகளும் நேரில் வந்து முதல்வரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். ஆனால் அழகிரி வரவே இல்லை. இதன் பின்னர் மதுரைக்கு பல அரசு சம்பந்தப்பட்ட, கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்விற்காக ஸ்டாலின் சென்றபோது அங்கே அழகிரியுடன் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்ப்பு நிலவியது . ஆனால், ஸ்டாலின்- அழகிரி சந்திப்பு நிகழவில்லை.
அண்மையில் கோவையில் உறவினரின் துக்க நிகழ்விலும் இருவரும் ஒரே இடத்தில் சில மணி நேரங்கள் இருந்தும் கூட அவர்களின் சந்திப்பு நிகழவில்லை. இந்த நிலையில்தான் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அதுவும் ஸ்டாலின் தனது சுயசரிதையான ’உங்களில் ஒருவன்’ நூலினை நேற்று வெளியிட்டு இருக்கும் நிலையில், அதில் பசுமையான நினைவுகளை பகிர்ந்திருக்கும் நிலையில், இன்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக நேரில் செல்கிறார் அழகிரி என்றும், இதனால் குடும்பத்தினர் புதிய உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்றும் தகவல். இதன்மூலம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அழகிரி ஆதரவாளர்களிடையே பேச்சு பரவுகிறது.