முதலில் முதல்வர் அந்த மாணவியை விசாரிக்கட்டும்.. பாஜக வலியுறுத்தல்

 
mk

திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியை மதமாற்ற முயன்றதாகவும் திருநீறு பூசிவரக் கூடாது, இந்து கடவுள் பெயரை எழுத கூடாது, ஏசுநாதரை வணங்க வேண்டும் என ஆசிரியை கூறியதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் கடந்த வாரம் புகார் அளித்தனர். அதற்கான மனு ரசீதையும் காவல் துறையினர் கொடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டிருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

l

இதுகுறித்து அவர் மேலும்,  இன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடம் மூன்று நாட்கள் விசாரணை மேற்கொண்டார் என்றும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும் ஆசிரியை மதமாற்றம் செய்தார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த புகார் தவறான புகார் எனவும், வாட்ஸ் அப்,பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவியின் தந்தை அவர்களிடம் பேசிய போது, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தான் நடந்த விவரங்களை கூறியதாகவும், ஆனால், அவர்கள் சமரசமாக செல்லும்படியும், பிரச்சினையை பெரிது படுத்த வேண்டாம், புகாரை திரும்ப பெற்று கொள்ளவும் எனவும் வற்புறுத்தியதாக கூறியது அதிர்ச்சியளிக்கிறது. அந்த கல்வி அதிகாரிகளிடமும் ஆசிரியைகள் மீது நடவடிக்கை தேவை என்ற கடிதத்தை எழுத்து மூலம் தெரிவித்திருக்கிறார் அந்த மாணவியின் தந்தை.  மேலும், அந்த மாணவியும், கல்வி அலுவலர்கள் தன்னை இதை பெரிது படுத்தாமல் விட்டுவிடும்படி வற்புறுத்தியதாக கூறுவது, அந்த குழந்தைக்கு மேலும் மன உளைச்சலை அதிகரிப்பதோடு, நடந்த தவறை மறைப்பதற்கு ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் முயற்சி செய்து கொண்டிருப்பதை உறுதி செய்கிறது என்கிறார்.

ltt

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பின் லாவண்யா தற்கொலை, கன்னியாகுமரியில் மதமாற்ற முயற்சி, தற்போது திருப்பூரில் நடைபெற்ற சம்பவம் என ஹிந்து குழந்தைகளின் மத  நம்பிக்கைகளை சிதைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்று கவலை தெரிவித்திருக்கும் நாராயணன்,

புகார் தவறானது என்றும், நியாயத்திற்காக குரல் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று ஆட்சியர் மிரட்டல் தொனியில் அறிக்கை விடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார்.

இந்த விவகாரத்தில் நடக்கின்ற அதிகார துஷ்பிரயோகத்தை தமிழக முதல்வர்  கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தான் அனைவருக்கும் முதல்வர் என்று கூறும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்  அந்த மாணவியையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும்  விசாரிக்கட்டும். அவர்களின் மீது தவறிருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் அல்லது தவறு செய்தவர்கள் மீதும், தவறுக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் . நாராயணன் திருப்பதி.