தனி ஒருவராக கே.பி.முனுசாமி திடீர் உண்ணாவிரத போராட்டம்
ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு துணையாக நின்ற கே.பி. முனுசாமி, எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். அவர் இன்று திடீர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். இதனால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் தொழிற்சாலை அமைக்கின்றோம் என்கின்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சூளகிரி தாலுக்கா அலுவலகம் முன்பாக தனி ஒருவராக பந்தலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். 5 ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்கிறோம் என்கிற பெயரில் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்காதே மாநில அரசே பறிக்காதே என்கின்ற கோரிக்கை பதாகையுடன் தாலுகா அலுவலகம் முன்பாக தனி ஒருவராக கே.பி. முனுசாமி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.