அது துரைமுருகன் காதுக்கு எட்ட...அதனால்தான் அப்படி பேசிவிட்டாராம்!
திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வாணியம்பாடி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியது திமுகவில் குறிப்பாக ஒரு சமூகத்தினரை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது . இதனால் வாணியம்பாடி திமுகவிற்குள் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 14ஆம் தேதியன்று வாணியம்பாடியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர், என்னை வாணியம்பாடியின் மண்ணின் மைந்தன் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் மண்ணின் மைந்தன் இல்லை. என் மகன் கதிர் ஆனந்த் தான் மண்ணின் மைந்தன். நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை காப்பாற்றியது வாணியம்பாடி மக்கள் தான். இன்றைக்கு அவன் எம்.பியாக இருப்பதற்கு காரணம் என்று சொல்லியிருந்தார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், வாணியம்பாடி மக்களுக்கு குறிப்பாக வாணியம்பாடி நகரத்தில் பரவலாக இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கையாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை முழுமையாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான் திமுகவில் விருப்பம் அது உங்களை வந்து சேர வேண்டுமென்றால் கிணற்றிலிருந்து தண்ணீர் வயலுக்கு போவதற்கு எப்படி பம்பும் வாய்க்காலும் தேவையோ அதுபோல அரசு திட்டங்கள் உங்களை வந்தடைய வேண்டும் என்றால் நல்ல கவுன்சிலர்களும் நல்ல தலைவர்களும் தேவை.
திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் திட்டங்கள் எளிதாக வந்து சேரும். இதை விட்டுவிட்டு ஏதோ தவறான எண்ணத்தில் எல்லோரும் யாரோ சிலரை தேர்ந்தெடுத்தால் ஐந்தாண்டு காலத்துக்கு இந்த வாணியம்பாடி நகரம் முழுமையாக புறக்கணிக்கப்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன் என்று பேசியிருந்தார்.
வாணியம்பாடி நகராட்சியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நகராட்சித் தலைவராக வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் மேற்கொண்டார். ஆனால் வேலூரில் கதிர் ஆனந்த் வாணியம்பாடி நகர பொறுப்பாளர்கள் சாரதியின் தாய் என்பவரை தலைவராக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த பிரச்சினை குறித்து குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அது துரைமுருகன் காதுக்கு எட்ட , அதனால்தான் மறைமுகமாக அவர்களுக்கு எச்சரிக்கையை விடுத்து அப்படி பேசி இருக்கிறார் என்கிறது கட்சி வட்டாரம்.