இரண்டு நாட்களில் நல்ல செய்தியை அறிவிப்பேன் -முதல்வர் ஸ்டாலின்

 
cm

இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள் தேர்தல் முடியட்டும் விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.    சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி வளாகத்தில் 45 ஆவது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,   இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்குவதை போல தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்பட இருக்கிறது.   அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படவிருக்கிறது.   முத்தமிழ் அறிஞர் கலைஞர் 98வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு அறிவிப்பை நான் செய்திருக்கிறேன்.    உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் கனவு திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

cc

 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் பிரிவு இல்லம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 5 சென்ற மனையில் 1,500 சதுரடியில் வீடு கட்டித் தரப்படும் .  இப்படி நான் தனித்தனியாக  சொல்லத் தொடங்கினால் நீண்ட நேரம் ஆகும் என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர்,   கடந்த 2007ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்க முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் வருகை தந்த நேரத்தில் அப்போது நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன்,    முதலமைச்சர் வந்தால் அறிவிப்பு இல்லாமல் இருக்காது என்று சொன்னார்.   இதன் பின்னர் பேசிய கலைஞர் ஒரு எழுத்தாளன் சொன்னது வீண் போக விட்டுவிடக் கூடாது என்று குறிப்பிட்டு,   தனது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசி அமைப்புக்கு வழங்கினார் . 

அந்த வகையில் முதலமைச்சராக வந்திருக்கின்ற நானும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றுதான் ஆசையோடு வந்தேன்.  ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதனுடைய விதிமுறைகள் எல்லாம்  உங்களுக்கு தெரியும் . ஆகவே அந்த அடிப்படையில் இப்போது நான் அறிவிக்க முடியாது.   இவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள்.   இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள்.   நல்ல செய்தியை விரைவில் அறிவிப்பேன்.  தேர்தல் முடியட்டும் அந்த செய்தியை நான் அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.