இன்று புதுச்சேரி நாளை தமிழ்நாடு : ராகுலுக்கு அண்ணாமலை பதிலடி
நாடாளுமன்ற மக்களவையில் நேற்றையதினம் ராகுல்காந்தி பேசியபோது மத்திய அரசு தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது என்று ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறது என்றும் சாடியவர், கூட்டாட்சி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? மாநிலங்களுடன் கலந்து பேசி தீர்வு காண்பதுதான் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தான். மாநிலங்களுக்கு தேவையானதை செய்வதுதான் கூட்டாட்சி.
தமிழகத்தை ஒருபோதும் மத்திய பாஜக அரசு ஆள முடியாது. அது மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தையும் பாஜக ஆள முடியாது என்று ஆவேசமாக பேசி இருந்தார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு இந்திய அரசியலில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர், அன்புக்குரிய ராகுல் காந்தி... நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தாக்கத்தை புரட்சிகரமாக எடுத்துரைத்ததற்கு ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் நான் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் சுயமரியாதையை மதிக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களுக்கு நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
பாஜக அரசு தமிழகத்தை ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று ராகுல்காந்தி சொன்னதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார். ’’தமிழ்நாட்டை சில காலங்களுக்கு ஆட்சி செய்தீர்கள் . அப்போது உங்கள் தாத்தா 1965ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு வழிவகை செய்தார். 1986ஆம் ஆண்டு உங்கள் அப்பா அதை செய்தார் . பின்னர் காமராஜரை அவமதித்தார்கள். 1970களில் உங்கள் பாட்டி கச்சத்தீவை வெளிநாட்டுக்கு கொடுத்தார்.
இலங்கைவாழ் தமிழர்களுக்கு இலங்கையில் நிகழ்ந்தவற்றிற்கு உங்கள் கட்சிதான் பொறுப்பு. 2009 ஆம் ஆண்டை நினைவு கூறுங்கள். எங்கள் பிரதமர் அவர்களுக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்கள் வாழ்வை மேம்படுத்தி உள்ளார் . ஜல்லிக்கட்டை ஒரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என கூறி அதை தடை செய்தீர்கள். பிரதமர் நீதிமன்றத்தை எதிர்த்து தமிழ்நாட்டு மக்களுக்காக அதை மீண்டும் பெற்றுக் கொடுத்தார். இவற்றின் விளைவாக தற்போது திமுகவின் ஆக்ஸிஜன் சப்ளை உடன் ஐசியூவில் இருக்கின்றீர்கள் .
புதுச்சேரியில் தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் . அடுத்தது உங்களின் இலக்கு தமிழகம்தான் . தமிழக மக்கள் பாஜக மற்றும் பிரதமருடன் இருக்கின்றார்கள். வரலாற்றை மறக்காதீர்கள் சார். அதையே நீங்கள் மீண்டும் செய்தால் அமேதியில் நடந்ததை போல கண்டிக்கப்படுவீர்கள். அடுத்து ஒரு முறை நீங்கள் செயற்கையாக இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கி அதன் பின்னால் செல்லும் வரை இப்போதைக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.