இன்னும் 30 வருசத்துக்கு ஸ்டாலின் தான் முதல்வர் -நடிகை ரோஜா

மின்னலை விட வேகமானவர் என்று ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியிருந்த நடிகை ரோஜா, இன்னும் முப்பது வருஷத்துக்கு ஸ்டாலின் தான் முதல்வர் தற்போது புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா, ஆந்திர தமிழக எல்லையோர பகுதிகளிலிருக்கும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கினார். இதற்கு அவரும் நன்றி தெரிவித்து பேசி இருந்தார். உடனடியாக ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததால், மின்னலை விட வேகமானவர் என்று புகழ்ந்திருந்தார் ரோஜா.
இந்த நிலையில், சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் எழும்பூர் திமுக இளைஞரணி சார்பாக புரசைவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிகே சேகர்பாபு , சென்னை மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் சுசி கணேசன், நடிகர்கள் எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, நடிகையும் ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா , திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர். கே. செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரோஜா, ஆந்திரா எனக்கு தாய்வீடு. தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் நான் வருவதற்கு இரண்டு பேர் காரணம். ஒன்று முதல்வர் மு.க. ஸ்டாலின். இன்னொருவர் அமைச்சர் சேகர்பாபு.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அண்ணன் தம்பி உறவாக நினைத்து முதல்வர் ஸ்டாலின் வந்து மேடையை அலங்கரித்தார். தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து மின்னல் போல செயல்பட்டு வருகிறார். அவர் செய்யும் நல்ல திட்டங்களால் நிச்சயம் இன்னும் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் தான் இருப்பார். அவரை அடிச்சிக்க முடியாது என்றார்.