முதல்வரை சந்தித்தும் பதில் இல்லை? திமுக நிர்வாகிகள் புண்படுத்துகிறார்கள் - புலம்பித்தள்ளும் வேல்முருகன்

 
tv

 திமுகவுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்,   திமுக நிர்வாகிகள் தங்கள் மனதை புண்படுத்துவதாக வேதனையை தெரிவித்திருக்கிறார்.

tv

 சென்னை கோயம்பேட்டில் நடந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வேல்முருகன் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சியினருடன் விவாதித்தார்.   இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’ ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை.   அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் எங்களுக்கு மிக சொற்பமான இடங்களை தான் கொடுத்தார்கள்’’ என்றார் .

தொடர்ந்து அது குறித்து பேசிய வேல்முருகன்,   ’’பட்டம்பக்கம் பேரூராட்சித் துணைத் தலைவர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணைத்தலைவர்,  விருத்தாசலம் அல்லது பண்ருட்டி நகராட்சி துணைத்தலைவர்,  நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத்தலைவர் மூன்றில் ஒரு பதவி வழங்கப்படும் என்று முதல்வர் சொன்னார்.  ஆனால் அந்த இடங்களை திமுகவினர் கைப்பற்றி முதல்வரின் உத்தரவிற்கு பின்னரும் பதவியை ராஜினாமா செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்’’ என்று குற்றம் சாட்டினார்.

vv

’’ முதல்வரை சந்தித்து அளித்த வேண்டுகோளுக்கு கூட இதுவரைக்கும் எந்த பதிலும் இல்லை.  காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் முதல்வரின் உத்தரவுப்படி பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஏன்?’’ என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.  மேலும்,   தமிழக வாழ்வுரிமை கட்சியினரை திமுகவினர்  மரியாதையாக நடத்தவில்லை .  பல இடங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எங்கள் கட்சியினரை புண்படுத்தி மனதளவில் காயப்படுத்தி விட்டார்கள்.  இதையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்’’ என்றார்.