பிரபல டிவிக்கு 48 மணி நேரம் கெடு விதித்த எடப்பாடி பழனிச்சாமி!

 
ep

தான் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது குறித்து மாலைமுரசு தொலைக்காட்சி  வெளியிட்ட தகவலுக்கு கண்டனம் தெரிவித்து 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி .

eee

முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் துபாய்க்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியிருக்கிறார்.   இந்த பயணத்தின்போது ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்றது குறித்து சர்ச்சை எழுந்தது.   அரசு முறை பயணம் என்று சொல்லிவிட்டு குடும்ப உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு கொண்டு சென்றது ஏன்? இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தது ஏன் என்று  எதிர்க்கட்சிகள் கடுமையாக விளாசி எடுத்தனர். 

இதுகுறித்து மாலைமலர் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றபோது அவரும் குடும்பத்து உறவினர்களை அழைத்துச் சென்றதாக சொல்லப்பட்டிருந்தது.

eee

 இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி,  ‘’30.3.2022 அன்று மாலை முரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் நிகழ்ச்சியில், நெறியாளர் செந்தில்வேல் என்பவர்,  நான் தமிழக முதல்வராக இருந்தபோது , தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற போது , எனது மகனையும் உறவினர்களையும் அழைத்து சென்றதாகவும், கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய சென்றதாகவும் உண்மைக்கு மாறாக, அபாண்டமாக வீண் பழி சுமத்தினார்.  எனது நற்பெயருக்கு களங்கத்தை விளைவித்த அந்த நெறியாளர், மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்’’ என்று எச்சரித்திருக்கிறார்.