தாராபுரத்தில் அமல்படுத்தப்படும் சட்டம் மேலூரில் செயல்படாதது ஏன்? தேர்தல் ஆணையருக்கு புரிதல் இல்லையா? - பாஜக பாய்ச்சல்
நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஹிபாப் விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது. மதுரை , திருப்பூர் தாராபுரத்தில் இந்த விவகாரம் வெடித்தாலும் மதுரையில் தான் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மதுரை மாவட்டத்தில் மேலூர் நகராட்சி 8வது வார்டில் அல்-அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்திருக்கிறார்கள். அப்போது அப்பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் என்பவர் அகற்றச் சொல்லியிருக்கிறார். அப்பெண்கள் அகற்ற முடியாது என்று சொல்ல, கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகள் வாக்கு பதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜனை வாக்குப்பதிவு மையத்திலிருந்து பாதுகாப்பு போலீசார் வெளியேறிய பின்னரே வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியிருக்கிறது.
இந்த சம்பவத்தையடுத்து கிரிராஜனை போலீசார் கைது செய்துள்ளனர்.
’’உங்களுக்கு மத நம்பிக்கைகள் தான் முக்கியம் என்று கருதுவீர்களேயானால் வாக்களிக்க செல்லாதீர்கள், ஹிஜாப் அணிந்து வாக்களிக்க சென்றால் வாக்காளரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும்" என்றும், "கடவுச்சீட்டு வேண்டுமென்றால் ஹிஜாபை நீக்கி புகைப்படம் எடுத்து கொள்ளும் இஸ்லாமிய பெண்கள் வாக்காளர் அடையாள புகைப்படம் எடுக்க மறுப்பது தவறு" என்றும் ஜனவரி 23, 2010 ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தெரியாமல் சட்ட விரோதமாக பாஜகவின் முகவரை வெளியேற்றிய அதிகாரிகளை தேர்தல் ஆணையம் தண்டிக்க வேண்டும்.’’ என்று தெரிவித்திருந்தார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
இதுகுறித்து அவர் மேலும், ’’திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 17வது வார்டு வளையக்காரத் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்களிக்க சென்ற இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப்பினை அகற்றி காட்டுமாறு வாக்குப்பதிவு மைய பெண் அலுவலர் கூறி உள்ளார். ஹிஜாப் அகற்ற கூறிய பெண் அலுவலருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக அறிவுறுத்தினர்.
ஹிஜாப் அகற்றி வாக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறி வாக்களிக்க சென்ற பெண்மணி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்றது.
இதைத் தான் மேலூரில் பாஜக வாக்குச்சாவடி முகவர் கிரிராஜன் கூறியுள்ளார். ஆனால், அவரை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. தமிழக தேர்தல் ஆணையர் 'மதசார்பற்ற நாட்டில் ஹிஜாப் அணிவது உரிமை' என்று வகுப்பு எடுத்துள்ளார். 'மத நம்பிக்கையை காரணம் காட்டி முக அடையாளத்தை காட்ட மறுத்தால் வாக்களிக்க வேண்டாம்' என 2010ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மேலூரில் சட்ட விரோதமாக தமிழக காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையர் நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வாக்குச்சாவடி முகவர், வாக்காளரின் அடையாளத்தை தெரிந்து கொள்வதற்கு அனைத்து உரிமையும் உள்ளது. கிரிராஜன் தன் கடமையை செய்துள்ளார்.
தாராபுரத்தில் அமல்படுத்தப்படும் சட்டம், மேலூரில் செயல்படாதது ஏன்? தேர்தல் ஆணையருக்கு சட்டம் குறித்த புரிதல் இல்லையா? அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறாரா? ’’ என்று கேட்கிறார்.
தொடர்ந்து அவர் இதுகுறித்து, நீதி கேட்ட கிரிராஜனுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்கிறார் நாராயணன் திருப்பதி.