அமைச்சர் அவமரியாதை செய்தாரா? மறுக்கும் திருமா
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை திமுக அமைச்சர் அவமரியாதை செய்தார் என்று பரபரப்பு செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதை மறுத்திருக்கிறார்.
ஹிஜாப் விவகாரம் குறித்தும், இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் ஆடை சுதந்திரம் உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் விசிக மூன்று இடங்களில் போட்டியிடுகிறது . இந்த வேட்பாளர்களை சந்திக்க கடலூர் வந்திருந்த தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹிஜாப் விவகாரம் குறித்து பேசினார்.
ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நாட்டை நாசமாக்கி நினைக்கிறது. இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் ஆடை சுதந்திரம் உள்ளது என்று சொன்னவர், கர்நாடகாவை மையமாகக் கொண்ட குழு தமிழக கிராமங்களில் ஊடுருவி மதவெறியைத் தூண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் அரசு சமூகநீதி குழுவை உருவாக்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோது, விசிகவினரை அமைச்சர் அவமரியாதை செய்தார் என்று சனாதன சக்தி ஜாதிய சக்திகள் தவறாக பரப்பி வருகின்றனர். ஆனால், நாங்கள் அண்ணன் தம்பி உறவுடன் செயல்பட்டு வருகிறோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என்றார்.