இதற்காகத்தான் மோடியை புகழ்ந்தாரா இளையராஜா?
இரண்டு முறை இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதால்தான் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருக்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு வெளியிடப்பட்டிருக்கும் ஒரு புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார். அந்த முன்னுரையில் பிரதமர் மோடியின் செயல்களை கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உடனே, அது எப்படி அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டு பேசலாம் என்று இளையராஜாவுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவினர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கமோ, இளையராஜாவுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்க போகிறது, பாரதரத்னா விருது கிடைக்கப் போகிறது, குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறப் போகிறார். அதனாலதான் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி இருக்கிறார் என்று பேச்சு எழுந்திருக்கிறது . ஆனால் ஜிஎஸ்டி விவகாரத்தில் இளையராஜாவுக்கு இரண்டு முறை சம்மன் வந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இளையராஜா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி இருக்கிறார் என்ற தகவல் பரவுகிறது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் சென்னை மண்டல அலுவலகம் கிரீம்ஸ் சாலையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திலிருந்து பிப்ரவரி 28ஆம் தேதியன்று இளையராஜாவுக்கு ஒரு சம்மன் சென்றிருக்கிறது. அந்த சம்மனில் மார்ச் 19ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த சம்மன்படி இளையராஜா நேரில் ஆஜரானாரா என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் மார்ச் 21ஆம் தேதியன்று மீண்டும் இளையராஜாவுக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. மார்ச் 28ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான் பிரதமரைப் புகழ்ந்து முன்னுரை எழுதி இருக்கிறார் இளையராஜா. இதனால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காகத் தான் இளையராஜா மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் புத்தகத்திற்கு மோடியை புகழ்ந்து முன்னுரை எழுதியிருக்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.