சென்னை மேயர் ரேசில் பிரியா முந்தியது எப்படி? யார் இவர்?

 
ரெ

சென்னையின்  இரண்டாவது பெண் மேயராக நாளை தேர்வு செய்யப்பட இருக்கிறார் 28 வயதே ஆன இளம்பெண் ஆர்.பிரியா.  மறைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் உறவான பிரியா, அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் ஆதரவாளர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்கிறது.  இதில் மேயர். துணை மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.  இதில் சென்னை மேயர் பதவிக்கு ஆர். பிரியா அறிவிக்கப்பட்டிருக்கிறார். 1971-72 காலகட்டத்தில் திமுக சார்பாக காமாட்சி ஜெயராமன் சென்னையின் பெண் மேயராக இருந்தார்.  அதன்பின்னர் சென்னையின் அந்த மேயர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறவர் ஆர்.பிரியா.

ப்ர்

 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக இருபத்தி ஒரு மாநகராட்சிகளிலும் வென்று இருந்தாலும் சென்னை மாநகராட்சி தான் பெரிதும் எதிர்பார்ப்பாக இருந்தது.    சென்னை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர் யார் அதுவும் பட்டியலினத்தவர் தான் மேயர் நாற்காலியை அலங்கரிக்க போகிறார் என்பதால் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது.   இதற்காக போட்டியும் பலமாகவே இருந்தது.

சென்னை தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி பதவிகளுக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்ததால் சென்னை மேயர் பதவிக்கு பெண் தான் என்று முன்பே உறுதியாகிவிட்டது.   ஆனால் சென்னையில் வென்ற 153 பேரில் ஆண்கள் தவிர்த்து மீதமுள்ள பெண்களில் பட்டியலினத்தவரை மட்டும் கணக்கில் எடுத்த போது 13 பேர் இருந்தார்கள்.   இந்த 13 பேரில் ஒரு பெண்ணுக்குத்தான் சென்னை மேயர் பதவி என்ற போது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.   அதிலும் மூன்று பேர் போட்டியில் முந்தி இருந்தார்கள்.

செ

இந்த மேயர் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருந்தவர்கள்  சென்னை மாநகராட்சி 100 வது வார்டில் வென்ற வசந்தி பரமசிவம்,  74 வது வார்டில் வென்ற ஆர். பிரியா,  159வது வார்டில் வென்ற மு.ஆ.நந்தினி ஆகிய மூன்று பேரும் தான்.   போட்டியில்  முன்னணியில் வந்திருக்கிறார் பிரியா.  இதில் ஆர். பிரியாவை ஸ்டாலின் தேர்வு செய்திருக்கிறார்.   இருபத்தி எட்டு வயதான பிரியா ராஜன், மறைந்த முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் உறவுப்பெண்.

ச்ச்
திமுக செயற்குழு உறுப்பினராகவும், கலை இலக்கிய பேரவை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த செங்கை சிவம், கடந்த 1996-2001-ம் ஆண்டு பெரம்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாகவும், வீட்டு வசதி மற்றும் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்தவர். மாரடைப்பு காரணமாக கடந்த 2015ம் ஆண்டில் அவர் மறைந்தார். 

68 வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செங்கை சிவம்,    பெரம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் ஒரு தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு  ஸ்கேன் எடுக்கப்பட்டது.  அங்கு அவர் பாத்ரூமுக்கு சென்ற போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால்,  அங்கேயே மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.மு.க. ஸ்டாலின்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். டி.ஆர்.பாலு, க.பொன்முடி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த செங்கை சிவத்தின் மனைவி பிரேமா .  மகன் முகிலன்,  மகள் ஷீலா எழிலரசி.

வடசென்னையின் திருவிக நகர் தொகுதிக்கு உள்ளடங்கிய 74 வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் மேயர் தேர்வில் அறிவிக்கப்பட்டிருக்கும் பிரியா ராஜன்,  அமைச்சர் பிகே சேகர்பாபுவின் ஆதரவாளர்.   பி.கே. சேகர்பாபு மாவட்ட செயலாளராக இருக்கும் சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்துதான் இவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

 அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம்,   பி.கே. சேகர்பாபு இருவரும் தங்களது ஆதரவாளர்களை சிபாரிசு செய்திருந்த நிலையில்,  கட்சியின் சீனியர்கள் பலரும் தனித்தனியே முட்டிமோதி கொண்டிருந்த நிலையில்,  சேகர்பாபுவின் ஆதரவாளரை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஸ்டாலின்.