வெளியோ போறதுக்கு இவ்ளோ பில்டப் அப்பா? நக்கலடித்து சிரித்த சபாநாயகர்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறைவேற்றப்படுவது குறித்து பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்தினை தெரிவித்தனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மசோதா குறித்து பேசிய பின்னர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேச எழுந்தார். ஆனால், சபாநாயகர் அப்பாவு, ஜெகன்மூர்த்தி பேச வாய்ப்பு அளித்தார்.
நயினார் நாகேந்திரன், தான் பேச வேண்டும் என்று சொன்னபோது, ஜெகன்மூர்த்தி பேசிய பின்னர் நீங்கள் பேசலாம் . ஒவ்வொருத்தருக்கும் அனுமதி கொடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு ஜெகன்மூர்த்தியை பேசச்சொன்னார்.
அப்போதும் இருக்கையில் உட்காராமல், தனக்கு பேச வாய்ப்பு கொடுக்குமாறு ரெண்டு நிமிஷம் பேச வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, ரெண்டு நிமிஷம் அல்ல ஐந்து நிமிடம் கூட பேசலாம். உங்கள் வரிசை வரும்போது நீங்கள் பேசலாம். இப்போது ஜெகன்மூர்த்தி பேசட்டும் என்றார்.
ஜெகன்மூர்த்தி பேச ஆரம்பித்ததும், அவர் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க நயினார் நாகேந்திரன் ஒரு பக்கமிருந்து பாஜக வெளிநடப்பு செய்கிறது. அதனால் நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு சென்று விடுகிறேன் என்றார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, நீங்கள் வெளிநடப்பு செய்யலாம் . ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் என்ன பேச வேண்டுமோ அதைப் பதிவு செய்து விட்டு நீங்கள் வெளிநடப்பு செய்யலாம். இப்போது பூவை ஜெகன்மூர்த்தி பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டு, ஜெகன்மூர்த்தி நீங்கள் பேசுங்கள் என்றார். ஆனால் மீண்டும் தன்னை பேசும்படி கேட்டு, நாங்க வெளியே நடப்பு செய்ய வேண்டும். அதனால் முதலில் எனக்கு பேச வாய்ப்பு அளியுங்கள் என்று நயினார் நாகேந்திரன் சொல்ல, சரி என்று சபாநாயகர் அனுமதி அளிக்க,
கடந்த முறை இந்த மசோதாவை நிறைவேற்றிய போதும் பாஜக வெளிநடப்பு செய்தது. அப்படி இருக்கும்போது எப்படி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று எப்படி சொல்கிறீர்கள்? இந்த முறையும் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று சொல்ல, அதற்கு பதிலளித்துப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ஒரு மசோதா நிறைவேற்றப்படும் போது அப்போது அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு அளித்தால் அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது தான். இந்த முறையும் நீங்கள் வெளிநடப்பு செய்யுங்கள். நாங்கள் இந்த மசோதாவை நிறைவேற்றுவோம் என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.
அதன்பின்னரும் நீட் மசோதா குறித்து நாகேந்திரன் பேச, வெளியே போவதற்கு இவ்வளவு பில்டப்பா என்று கலாய்த்துவிட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார் சபாநாயகர்.