ஆளுநர் ஆக துடிக்கிறார் அண்ணாமலை! விரைவில் மோடி அவருக்கு அரசாங்க பதவியை கொடுப்பார் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்தமானில் ஆளுநர் பொறுப்பு வாங்க துடிக்கிறார். ஆனால், அவருக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை தான் என்று விமர்சனம் செய்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சித்தார். ’’அண்ணாமலை தினமும் உளறிக் கொண்டிருக்கிறார். தமிழிசை சௌந்தராஜன், எல் முருகனுக்கு பதவி கிடைத்தது போல தானும் பதவி பெறுவதற்காகவே அண்ணாமலை தினமும் திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார்’’என்றார்.
தொடர்ந்து அவர், ‘’ அந்தமானில் ஆளுநர் பொறுப்பை வாங்கிவிட அண்ணாமலை துடிக்கிறார். ஆனால், அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை தான். அங்கே பல சித்தர்கள் இருக்கிறார்கள். இவரும் ஒரு சித்தராக இருக்கலாம்’’ என்று விமர்சித்தார்.
தொடர்ந்து அண்ணாமலை குறித்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘’ தமிழக அரசியலை புரட்டிப் விடலாம் என்று பேசிவருகிறார் அண்ணாமலை. 150 ஆண்டு கால அரசியலை பின்பற்றுகிற மாநிலம் தமிழகம். இங்கே உத்தர பிரதேசத்தைப் போல குஜராத்தை போல மடத்தனமான மக்கள் இல்லை. விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்’’ என்றார்.
மேலும், ’’அண்ணாமலையின் சத்தங்களுக்கு செவிசாய்த்து விரைவில் மோடி ஒரு அரசாங்க பதவியை அவருக்கு கொடுப்பார். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பாஜக அகில இந்திய கட்சியல்ல மாவட்ட கட்சிதான்’’ என்று கடுமையாக விமர்சித்தார்.