காயத்ரி ரகுராமுக்கு குட்டு வைத்த அண்ணாமலை

 
gyy

 கட்சியின் ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு தனக்குக் கீழ் இருந்த நிர்வாகிகளை நீக்கம் செய்த காயத்திரி ரகுராமின் அறிவிப்பு செல்லாது என்று பாஜக தலைமை அறிவித்து காயத்ரி ரகுராமுக்கு குட்டு வைத்திருக்கிறது.   

 தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார்.    இவர் தனது அணியில் உள்ள நிர்வாகிகள் சிலரை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்து உள்ளார்.   அது செல்லாது என்று பழைய நிர்வாகிகளே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பாஜக தலைமை அறிவித்திருக்கிறது.

gy

 கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று தனது லெட்டர் பேடில் தனக்குக் கீழ் இருந்த நிர்வாகிகள் சிலரை நீக்குவதாக காயத்திரி ரகுராம் அறிக்கை வெளியிட்டார்.  திரை பிரபலங்களான பெப்சி சிவா,  அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ்,  உமேஷ் பாபு, விருகை வெங்கடேஷ்,  சர்மா ஆகியோரை காயத்ரி ரகுராம் நீக்கி இருந்தார்.   

 மாநில அளவில் நிர்வாகிகளை நீக்குவதும் சேர்ப்பதும் தேசிய மற்றும் மாநில தலைமையின் தலைமையில் ஒப்புதலின் பேரில் தான் செய்ய வேண்டும் என்று கட்சிக்கு விதி இருக்கிறது.   ஆனால் அந்த கட்சியின் விதிகளுக்கு மாறாக காயத்ரி ரகுராம் தன்னிச்சையாக செயல்பட்டதால் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளாக 8 பேரை நியமித்து,  இந்த எட்டு பேரையும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்றுக்கொள்வார் ஆதரிப்பார்கள் என்று நம்புவதாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.


 பாஜகவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க உடனே காயத்ரி ரகுராம் நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என்றும் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.   அந்த அறிக்கையில் , 1.2 .2022 அன்று கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அந்த பிரிவு நிர்வாகிகள் மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.  அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டபடி இல்லாமல் கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள் அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து காயத்ரி ரகுராம்,  மாநில தலைவரின் முடிவை ஏற்பதாக தெரிவித்து அவரது முடிவுக்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார்.    கட்சித் தலைமையின் ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்த காயத்ரி ரகுராமுக்கு அண்ணாமலை குட்டு வைத்திருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.