பிகே கையில் இருக்கும் 600 பக்க அறிக்கை! என்ன சொல்லப்போகிறார் சோனியா?

 
pk

மூன்று முறை சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கும் தேர்தல் வியூகம் நிபுணர் பிரசாந்த் கிஷோர் அடுத்தகட்ட ஆலோசனைக்காக இன்று மீண்டும் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.   அப்போது தன்னிடம் இருக்கும் 600 உக்திகள் குறித்து விளக்கவிருக்கிறார்.

 கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.   மத்தியில் மட்டுமல்லாது மாநிலங்களிலும் அதிகாரத்தை இழந்து வருகிறது.   இதனால் விரக்தியடைந்த மூத்த தலைவர்கள் உட்கட்சி தேர்தலை நடத்தி கட்சியை சீரமைப்பு செய்ய வலியுறுத்தி வருகிறார்கள்.  தொண்டர்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

p

 இந்தநிலையில் வரப்போகும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறது காங்கிரஸ் என்று கேள்வி எழுந்திருக்கிறது.    இந்த நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்காக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்,  சோனியா காந்தி -ராகுல் காந்தி மற்றும் காங்கிரசின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். 

 கட்சியில் தனக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டால் பாஜகவை வீழ்த்தி காங்கிரசை வரும் 2024ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க தன்னால் முடியும் என்றும்,  அதற்கான வியூகங்களை வகுத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.   2024 நாடாளுமன்றத் தேர்தலில் 370 இடங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும்,  சில மாநிலங்களில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

இதனால் பிரசாந்த் கிஷோரை காங்கிரசில் இணைப்பது தொடர்பாக  சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால்,  பிரசாந்த் கிஷோர் என்ற தனிநபரை திடீரென்று கட்சிக்கு நுழைத்து பெரிய பொறுப்பு வழங்குவதற்கு காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைத்துக்கொள்வது தொடர்பான முடிவை அறிவிப்பதற்கு கட்சி தலைமை இம்மாதம் இறுதி வரை அவகாசம் அளித்து இருக்கிறது என்று தகவல்.

இதற்கிடையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வைப்பதற்கான உத்திகளை 600 பக்க திட்ட அறிக்கையாக தயார் செய்து வைத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.   அதனால் இன்று சோனியாவை சந்தித்து அது குறித்து விளக்கம் அளிக்க இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.