உங்களுக்கு வெட்கமாக இல்லையா? வைகோவுக்கு பாஜக கேள்வி

 
vo1

மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை; இந்தியக் கடற்படை தன் கடமையைச் செய்யவில்லை என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சொல்லியிருந்தார். 

இதற்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது  திமுக அங்கம் வகித்த மன்மோகன் தலைமையிலான அரசு பூப்பறித்து கொண்டிருந்ததா? மீன் பிடித்து கொண்டிருந்ததா? ஒரு சீட்டுக்காக  அந்த கூட்டணியில் இணைந்து தமிழினத்துக்கு நீங்கள் துரோகம் செய்தீர்களா இல்லையா? கடமையை பற்றி பாஜகவை விமர்சிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்கிறார்.

vi

தமிழ்நாட்டு மீனவர்கள் 55 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து, அவர்களுடைய 6 மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 1980-களில் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில், 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று விட்டது.  அன்று முதல் இன்று வரையிலும், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும்நான் கேள்விகள் கேட்டு வருகிறேன்.

நடப்பு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் கூட, நான் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் விளக்கம் அளித்தார். இலங்கை பிரதமருடன் இந்திய பிரதமர் பேசினார். வெளியுறவு துறை அமைச்சர், இலங்கைக்குச் சென்று பேசினார்.   5ஆவது சுற்று பேச போகின்றோம் என, அயல் உறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் கூறினார். இதுவரை நடந்த பேச்சுகளில் என்ன தீர்வு கண்டீர்கள்? இனி எதற்காகப் பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

naa

குஜராத் மீனவர் ஒருவரை, பாகிஸ்தான் கடற்படை தாக்கியது என்றவுடன், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, அயல் உறவுத் துறை அமைச்சகத்துக்கு வரவழைத்து, கண்டனத்தைப் பதிவு செய்கின்ற பாஜக அரசு, தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்கை செய்யாதது ஏன்? இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஈடு எதுவும் பெற்றுத் தந்தது இல்லை. அந்தக் கோரிக்கையைப் பலமுறை வலியுறுத்தியும் பயன் இல்லை.

கேளாக் காதினராக ஒன்றிய அரசு இருக்கின்றது; ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கைத்தான் அரசு கடைப்பிடித்து வருகின்றது. பாஜக அரசு தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை; தீர்வு எதுவும் இல்லை; இந்தியக் கடற்படை தன் கடமையைச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் வைகோ. 

இந்த குற்றச்சாட்டுக்குத்தான் பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது.