அந்த சினிமா காமெடி போல் நிஜத்திலும் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபலம்

முடி வெட்டும் போது தலையில் தண்ணீர் தெளித்து அதன் பின்னர் தான் முடி வெட்டுவதுதான் வழக்கம். சாதாரண கடைகளில் தான் இப்படி கைகளால் அள்ளி தண்ணீர் தெளித்து விடுவார்கள். வாட்டர் ஸ்பிரே அடித்து முடி வெட்டும் பழக்கம் வந்து பல காலம் ஆகிவிட்டது.
This is Javed Habeeb... Spitting instead of using water... absolutely horrible 🤮🤬 pic.twitter.com/8s7xaE8qfO
— Kungfu Pande 🇮🇳2.0 (@pb3060) January 5, 2022
இதை வைத்து சினிமாவில் ஒரு காமெடி வந்தது. தண்ணீரைத் தொட்டு தெளிக்கும்போது, என்னய்யா இது பழசு மாதிரி, இப்பத்தான் வந்துடுச்சே புஸ்ஸூ புஸ்ஸூன்னு அடிக்கிறாங்களே .. அது இல்லையா என்று கேட்க, அந்த ஸ்பிரே உடைந்து விட்டதால், கஷ்டமரை சமாளிப்பதற்காக, வாயில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு, ஸ்பிரே அடிப்பது மாதிரி செய்வார் அந்த நாயகன்.
திரைப்படத்தில் இப்படி நகைச்சுவைக்காக அந்த காட்சி எடுக்கப்பட்டு இருந்தாலும் நிஜத்தில் அப்படி ஒரு காட்சி நடந்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் மிகப் பிரபலமான முடிதிருத்தும் கலைஞரான ஜாவித் ஹபீப்தான் இந்த செயலை செய்திருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஒரு பொது இடத்தில் பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி இருக்கிறார். இந்த பயிற்சி கூடத்திற்கு அப்பகுதியில் உள்ள பல முடிதிருத்தும் கலைஞர்கள் அவரிடம் பயிற்சி பெறுவதற்காக வந்திருக்கிறார்கள். அப்போது ஒரு பெண்ணிற்கு முடி வெட்டுவதற்காக அவரை சேரில் அமர வைத்து டெமோ காண்பித்திருக்கிறார்.
பயிற்சி அளிக்கும் போது ஜாலியாக, இவரது முடி ரொம்ப ட்ரையாக இருக்கிறது. அதனால் இவரது முடியில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே தன் எச்சிலை அவர் தலையில் துப்புகிறார். பின்னர் சிரித்துக்கொண்டே , தண்ணீரை விட என் எச்சிலுக்கு அதிக சக்தி இருக்கிறது என்று சொல்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜாவித் ஹபீப் செய்த போது அங்கிருந்த மக்கள் கைதட்டி சிரித்தார்கள். ஆனால் இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், தான் செய்தது தவறு தான் என்று மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார் ஜாவித் ஹபீப்.