நாகையில் வாக்கு எண்ணும் மையம் அருகே பறந்த டிரோன் கேமராவால் பரபரப்பு!

 

நாகையில் வாக்கு எண்ணும் மையம் அருகே பறந்த டிரோன் கேமராவால் பரபரப்பு!

நாகை

நாகையில் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே டிரோன் கேமரா பறந்ததால் அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டத்திற்குட்பட்ட நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 தொகுதிகளில் வாக்குகள் பதிவான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாகையில் தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணும் மையம் அருகே திடீரென டிரோன் கேமரா ஒன்று பறந்து கொண்டிருந்தது.

நாகையில் வாக்கு எண்ணும் மையம் அருகே பறந்த டிரோன் கேமராவால் பரபரப்பு!

இதனை பார்த்த கண்காணிப்பு பணியில் இருந்த அரசியல் கட்சியினர், தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அங்கு வந்த திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், டிரோன் கேமரா குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த நாகை ஆட்சியர் பிரவீன் பி.நாயரிடம் இது குறித்து விசாரிக்க வலியுறுத்தினர்.

தொடர்ந்து, டிரோன் கேமராவை இயக்கிய சென்னையை சேர்ந்த 3 இளைஞர்களை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து டிரோன் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நாகூர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில், தனியார் கல்லூரி குறித்த விளம்பர படம் எடுக்க டிரோனை பறக்க விட்டது தெரியவந்தது. எனினும் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பில் ஈடுபடுத்தால் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.