கத்தி - இரும்பு கம்பியால் மோதல் : ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாமியார்-மருமகன்

 
r

மாமியார்,  மருமகன் சண்டை வெறும் வாக்குவாதத்தில் நிற்காமல் கைகலப்பில் சென்று இரும்பு கம்பி - கத்தியை வைத்துக்கொண்டு சண்டை போட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்திருக்கிறார்கள்.

 சேலம் மாவட்டத்தில் கொண்டாலப்பட்டி பகுதியில் கிழக்கு வளவை வசித்து வருபவர் பச்சையம்மாள்.   40 வயதான பெண்மணியின் கணவர் சரவணன் காலமான பின்னர் வேறொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

 பிரியதர்ஷினி என்ற மகளை கலைச்செல்வன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.   திருமணம் நடந்து  தம்பதிகள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில்  குடும்ப தகராறு ஏற்பட்டு இருக்கிறது.   இதனால் பிரியதர்ஷினி தனது தாய் பச்சையம்மாளிடம் சொல்லி அழுதிருக்கிறார்.  

b

தான் நேரில் வந்து பிரச்சினையை சரி செய்கிறேன் என்று சொல்லி பச்சையம்மாள் தனது மருமகன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு  வீட்டிற்கு சென்றிருக்கிறார் பச்சையம்மாள்.  மருமகனிடம் தகராறு ஏன் என்று கேட்டிருக்கிறார்.   அப்போது மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 இந்த வாக்குவாதம் நிற்காமல் ஒருகட்டத்தில் முற்றிப்போய் இருக்கிறது.   ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் .  கணவர் இறந்ததும் வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதை கேவலமாக பேசியிருக்கிறார் கலைச்செல்வன்.  மேலும்,   உன்னை போல என் மனைவியை கெடுத்து விடாதே என்று மாமியாரை பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

 இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பச்சையம்மாள்,   இரும்பு பைப்பை எடுத்து கலைச்செல்வனின் தலையில் ஓங்கி அடித்து இருக்கிறார்.  அதனால் கலைச்செல்வன் தலையில் ரத்தம் படிந்திருக்கிறது.   இதில் மேலும் ஆத்திரமான கலைச்செல்வன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாமியார் பச்சையம்மாளை குத்தி இருக்கிறார்.  இதில் இருவருமே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இருக்கிறார்கள்.

 பிரியதர்ஷினி போட்ட சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

 இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.