`கூரியரில் வந்த சாவி; வீட்டை திறந்தால் இளைஞரின் சடலம்!’- சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி

 

`கூரியரில் வந்த சாவி; வீட்டை திறந்தால் இளைஞரின் சடலம்!’- சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூா் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்பில் 2-வது தளத்தில் குமார் என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சேதுபதி, அவரின் சகோதரர் வெங்கடேசன் ஆகியோருக்கு வாடகைக்கு விட்டிருந்தார் குமார். ஊரடங்கு காரணமாக சேதுபதியும், வெங்கடேசனும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

`கூரியரில் வந்த சாவி; வீட்டை திறந்தால் இளைஞரின் சடலம்!’- சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி

இந்தநிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடும் தூர்நாற்றம் வந்துள்ளது. அதனால் குடியிருப்புவாசிகளோ, கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி அதை சுத்தப்படுத்தினர். அதன்பிறகும் தூர்நாற்றம் வந்து கொண்டிருருந்தது. இதையடுத்து எங்கிருந்து தூர்நாற்றம் வருகிறது என குடியிருப்பில் வசித்தவர்கள் ஆய்வு செய்தபோது 2-வது தளத்தில் உள்ள சேதுபதி, வெங்கடேசன் தங்கியிருந்த வீட்டிலிருந்து வருவதை கண்டறிந்தனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர், சேதுபதி, வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார்.

இதையடுத்து சிவகங்கையிலிருந்து வீட்டின் சாவியை கூரியர் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாவி கைக்கு வந்ததும் வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது படுக்கையறையிலிருந்து கடும் தூர்நாற்றம் வீசியது. உடனே அங்கு சென்று பார்த்தபோது நிர்வாணமாக அழுகிய நிலையில் ஒருவர் இறந்துகிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் சிவகங்கையிலிருந்த வெங்கடேசனுக்கும் சேதுபதிக்கும் போனில் தகவல் தெரிவித்தார். அவர்கள், வீட்டில் மதன் என்பவர் தங்கியிருந்தார். அவர்தான் வீட்டை பூட்டிவிட்டு சாவியை எங்களிடம் கொடுத்துவிட்டு மதுரைக்குச் சென்றார் என்று தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யாரென்று மதனிடம் போலீஸார் போனில் விசாரித்தனர். அப்போது, இறந்தவர் திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த பழனிமுருகன் (35) எனத் தெரியவந்தது. பூட்டிய வீட்டுக்குள் இளைஞர், நிர்வாண நிலையில் இறந்தது எப்படி என போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

`கூரியரில் வந்த சாவி; வீட்டை திறந்தால் இளைஞரின் சடலம்!’- சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி

“சேதுபதியும் வெங்கடேசனும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த வீட்டில் குடியிருந்துவருகின்றனர். இவர்களின் நண்பர் மதன், ஓராண்டுக்குமுன் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். ஊரடங்கையொட்டி ஊருக்குச் சேதுபதியும் வெங்கடேசனும் சென்றதால் மதன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போதுதான் மதனின் நண்பன் பழனிமுருகன் இந்த வீட்டுக்கு வந்து தங்கியிருந்துள்ளார். பழனிமுருகனின் அம்மா, சகோதரி மலேசியாவில் குடியிருந்து வருகின்றனர். மலேசியாவில் மதன் பணியாற்றிய காலத்தில்தான் பழனிமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கையொட்டி மலேசியாவிலிருந்து சென்னை வந்த பழனிமுருகன் மீண்டும் அங்குச் செல்ல முடியவில்லை. அதனால்தான் மதனுடன் பழனிமுருகன் தங்கியிருந்துள்ளார். கடந்த மாதம் சென்னை வீட்டை பூட்டிவிட்டு மதன், சொந்த ஊருக்குச் புறப்பட்டு சென்றுவிட்டார். சாவியை சேதுபதி, வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார். ஆனால், வீட்டில் பழனிமுருகன் தங்கியிருந்த விவரத்தை சேதுபதி, வெங்கடேசனிடம் கூறவில்லை. தற்போது மதனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதனால் பழனிமுருகன் பூட்டிய வீட்டுக்குள் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை” என்றனர் காவல்துறையினர்.
பூட்டிய வீட்டுக்குள் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.