2 வருஷமா காதுக்குள் இரைச்சல்… தூக்கத்தை தொலைத்த இளைஞருக்கு வாழ்க்கை தந்த மருத்துவர்கள்!

 

2 வருஷமா காதுக்குள் இரைச்சல்… தூக்கத்தை தொலைத்த இளைஞருக்கு வாழ்க்கை தந்த மருத்துவர்கள்!

இரண்டு ஆண்டுகளாக காதில் ரீங்காரம் போன்று இரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்ததால் இளைஞர் ஒருவர் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு என்ன பிரச்னை என்று கண்டறிந்து சென்னை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து சாதனை புரிந்துள்ளனர்.

இது குறித்து சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோசயின்சஸ் அன்ட் ஸ்பைனல் டிஸ்ஆர்டர்ஸ் குழு தலைவரும் இயக்குநருமான டாக்டர் கே.ஶ்ரீதர் கூறுகையில், “இந்த இளைஞருக்கு 2019ம் ஆண்டில் இருந்து காதில் ஏதோ சத்தம் கேட்க ஆரம்பித்துள்ளது. அவரும் பார்க்காத பரிசோதனை இல்லை… செய்யாத வைத்தியம் இல்லை. ஆனால் அவருக்கு தீர்வு மட்டும் கிடைக்கவே இல்லை.

2 வருஷமா காதுக்குள் இரைச்சல்… தூக்கத்தை தொலைத்த இளைஞருக்கு வாழ்க்கை தந்த மருத்துவர்கள்!

இதனால் தூக்கம் கெட்டது. அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ முடியாத சூழலுக்கு அந்த இளைஞர் ஆளானார். திட்டமிட்ட உயர் படிப்பும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடைசியாக எங்கள் மருத்துவமனைக்கு செல்லும்படி மருத்துவர்கள் கைகாட்டியுள்ளனர்.

அவரை நாங்கள் பரிசோதனை செய்து பார்த்தோம். அதிநவீன எம்.ஆர்.ஐ சோதனை செய்யப்பட்டது. ஆனாலும் எங்களாலும் கூட எதனால் இந்த பிரச்னை ஏற்படுகிறது, எதனால் அவருக்கு காதில் சத்தம் கேட்கிறது என்பதை கண்டறிய  முடியவில்லை. மிகவும் சவாலாக இருந்த இந்த பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று யோசித்து வந்தோம். தொடர்ந்து பரிசோதனை செய்து வந்த போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளம் ஒன்று காதின் காக்ளியர் நரம்புக்கு அருகே செல்வதும், தமனி ரத்த நாளத்தால் காதின் காக்ளியர் நரம்பு தூண்டப்பட்டு சத்தம் கேட்பதையும் கண்டறிந்தோம்.

அவருக்கு காக்லியர் நரம்பு பகுதியில் மைக்ரோ வாஸ்குலார் டிகம்ப்ரஷன் செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகத் துல்லியமாக நுண்ணிய அறுவைசிகிச்சை மிகப்பெரிதுபடுத்திப் பார்க்கப்பட்டு செய்யப்பட்டது. இதில், பிரச்னைக்கு காரணமாக இருந்த தமனியானது செவித்திறன் நரம்புக்கு அருகில் இருந்து நகர்த்தப்பட்டது.

இது மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சையாகும். உலகிலேயே 50க்கும் குறைவானவர்களுக்குத்தான் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இவர்தான் முதல் நபர். அறுவைசிகிச்சை துல்லியமாக மேற்கொள்ளப்படாவிட்டால் ஒன்று அவருக்கு காது கேட்காமலேயே போய்விடும், அல்லது முக நரம்புகள் பாதிக்கப்படுவதால் முகத்தின் பல பகுதிகள் செயலிழந்துவிடலாம். இருப்பினும் மிகவும் துல்லியமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவருக்கு இதுநாள் வரை காதில் கேட்டுக்கொண்டிருந்த அசௌகரியமான சத்தம் மறைந்து போனது” என்றார்.

அந்த இளைஞருக்கு ஏற்பட்டிருந்தது டின்னிடஸ்  (Tinnitus) என்ற காதிரைச்சல் நோய் ஆகும். உலகில் மிகக் குறைந்த நபர்களுக்கே இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த இளைஞர்தான் முதல் நபர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.